Published : 22 Jul 2023 05:14 PM
Last Updated : 22 Jul 2023 05:14 PM

மணிப்பூர் கொடூரம் | “ராஜஸ்தான் உணர்வுகளை புண்படுத்திவிட்டார் பிரதமர் மோடி” - அசோக் கெலாட் காட்டம்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ஜெய்பூர்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக மணிப்பூர் கொடூர சம்பவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தானின் உணர்வுகள் புண்படுத்திவிட்டதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் காட்டமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூரில் முதல்வர் அசோக் கெலாட் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசும்போது, ராஜஸ்தான், சத்தீஸ்கர் முதல்வர்கள் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கவனத்துக் கொள்ளுங்கள் என்ற ரீதியில் பேசியது ராஜஸ்தானின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி ஒருமுறைக் கூட மணிப்பூருக்குச் செல்லவில்லை. அங்குள்ள நிலவரம் குறித்து எந்தக் கூட்டமும் நடத்தி ஆய்வு மேற்கொள்ளவில்லை. தேர்தலுக்காக கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு சென்ற பிரதமர், மணிப்பூருக்குச் செல்லவில்லை. இவ்வளவுக்கும் மணிப்பூரில் அவர்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. இதுவே, அங்கு காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

மணிப்பூரில் என்னதான் நடக்கவில்லை. பிரதமர் 140 கோடி மக்களும் வெட்கி தலைகுனிய வேண்டும் என்கிறார். அப்படி இல்லை. உங்கள் அரசின் திறமையின்மையால், தோல்வியால், பொறுப்பற்றத் தன்மையால் அந்த மக்கள் துன்பப்படுகிறார்கள். உள்துறை அமைச்சர் ஒருமுறை அந்த மாநிலத்துக்குச் சென்றார், ஆனால், அங்கு இன்னும் பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பிரதமர் சில நிமிடங்கள் மணிப்பூர் பற்றி பேசியிருக்கிறார். அதுவும் ஒப்புக்காக பேசியிருக்கிறார்" என்றார்.

முன்னதாக, மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கொடூரமாக வீதியில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ ஒன்று புதன்கிழமை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது குறித்து வியாழக்கிழமை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொருக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், "மிகுந்த வேதனையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் நிற்கிறேன். மணிப்பூர் மகள்களுக்கு நேர்ந்த சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் தப்ப முடியாது என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூரில் நடந்த இந்தச் சம்பவம் நாகரிகமான எந்த சமுதாயத்துக்கும் அவமானம். இது ஒட்டுமொத்த நாட்டையும் அவமானப்பட செய்துள்ளது. நாட்டு மக்கள் 140 கோடி பேரும் வெட்கி தலைகுனிகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்களை மேலும் வலுப்படுத்துமாறு அனைத்து முதல்வர்களையும் கேட்டுக் கொள்கிறேன். ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கை வலுப்படுத்தி பெண்களை பாதுகாக்க வேண்டும். மக்கள் சட்டம் - ஒழுங்குக்கு முக்கியத்துவம் அளித்து பெண்களை மதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இதில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிரதமரின் பேச்சில் மணிப்பூருடன் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பேசியது குறித்து கருத்து கூறியிருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,"தவறான ஒப்பீடு இது" என்று தெரிவித்திருந்தார். மேலும், மணிப்பூர் முதல்வர் ஏன் இன்னும் நீக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். | வாசிக்க > மணிப்பூர் கொடூரம் | “அமித் ஷாவுக்கு எப்படி தெரியாமல் போனது?” - கேள்விகளை அடுக்கும் காங்கிரஸ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x