Published : 21 Jul 2023 11:32 AM
Last Updated : 21 Jul 2023 11:32 AM

மணிப்பூர் வன்கொடுமை விவகாரம் | “அவையில் பிரதமர் பேசவேண்டும்...” - நாடாளுமன்றத்தில் கடும் அமளி

புதுடெல்லி: மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரண்டாவது நாளாக இன்று மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அவை பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடியபோது அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவை, மாநிலங்களவையில் பல்வேறு கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மக்களவை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியவுடன் மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 2வது நாள் கூட்டம் தொடங்கியவுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் அமளிக்கு இடையே பேசினார். "மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு விவாதிக்கத் தயார். ஆனால் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அமளியில் ஈடுபட்டு அவையை முடக்குகின்றன" என்று கூறினார்.

ஆனாலும் எதிர்க்கட்சியினர் “ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதம் நடத்த வேண்டும். மணிப்பூர் சம்பவம் பற்றி பிரதமர் அவையில் பேச வேண்டும்” என்று கூச்சலிட்டனர். மணிப்பூர் விவகாரத்தை விவாதிப்போம் என்ற பதாகையை மக்களவை சபாநாயகர் அருகே எடுத்துச் சென்று முழக்கமிட்டனர். அமளி காரணமாக அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். மீண்டும் 12 மணிக்கு அவை கூடியபோது அமளி சற்றும் குறையாததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே பிரச்சினை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது.

மணிப்பூர் வன்கொடுமை - நடந்தது என்ன? - கடந்த மே 4-ம் தேதி, மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிலரை மைத்தேயி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடத்திச் சென்றனர். அவர்களில் இரு பெண்களை ஆடையின்றி, மானபங்கம் செய்தபடி கிராமத்துக்குள் ஊர்வலமாக இளைஞர்கள் அழைத்துச் சென்றனர். அதில் ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். தங்களை விட்டு விடும்படி அந்த இளைஞர்களிடம் பழங்குடியின பெண்கள் கெஞ்சினர். இச்சம்பவத்தை தடுக்க முயன்ற ஒரு பழங்குடியின இளைஞரையும் அவர்கள் கொலைசெய்தனர். அந்த வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

4 பேர் கைது: மணிப்பூர் வீடியோ சம்பவம் வெளியான பின்பு, மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் உள்ள நாங்போக் செக்மாய் காவல் நிலையத்தில், அடையாளம் கண்டறியப்படாத ஆயுத கும்பல் மீது கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ பதிவில் தெரியும் முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

வீட்டுக்கு தீ வைப்பு: மணிப்பூரில் இரு பெண்களை ஆடையின்றி, மானபங்கம் செய்தபடி கிராமத்துக்குள் ஊர்வலமாக இழுத்துச் சென்ற இளைஞர்களில் ஒருவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞர் சார்ந்த மைத்தேயி இனப் பெண்களே அந்த இளைஞரின் வீட்டுக்குத் தீவைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தால் ஒட்டுமொத்த மைத்தேயி சமூகத்துக்கு அந்த இளைஞர்கள் அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக அப்பெண்கள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x