Published : 09 Nov 2017 03:04 PM
Last Updated : 09 Nov 2017 03:04 PM

டெல்லியில் மீண்டும் வருகிறது கார்களுக்கு கட்டுப்பாடு: அர்விந்த் கேஜ்ரிவால் அரசு ஆலோசனை

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதையடுத்து கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

டெல்லியில் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதை குறைக்க, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை பதிவு எண் கொண்ட கார்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் மாற்று நாட்களில் மட்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் 2016 ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது. இதனால் காற்றில் மாசு ஏற்படுவது ஒரளவு குறைந்தது.

மீண்டும் காற்று மாசு

இந்நிலையில் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் காற்று மாசு அதிகரித்துள்ளது. அத்துடன் பல்வேறு பகுதிகளில் உள்ள காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 474 என்ற அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்லியில் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மீண்டும் டெல்லியில் கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.

முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் அத்தியாவசிய தேவைக்கு இயக்கப்படும் வாகனங்கள் தவிர சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

500 பேருந்துகள்

இதுகுறித்து டெல்லி போக்குவரத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில் ‘‘ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை பதிவு எண் கொண்ட கார்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் அனுமதிக்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலித்து வருகிறோம். காற்று மாசு அளவு பற்றி ஆலோசித்து இந்த விஷயத்தில் முடிவெடுக்கப்படும். மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் விதமாக அரசு போக்குவரத்து கழகத்திற்கு கூடுதலாக 500 பேருந்துகள் வாங்கவும் திட்டமிட்டு வருகிறோம்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x