Published : 15 Nov 2017 04:47 PM
Last Updated : 15 Nov 2017 04:47 PM

காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு: ஹரியாணா முதல்வருடன் அர்விந்த் கேஜ்ரிவால் சந்திப்பு

 டெல்லியில் காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரை சந்தித்துப் பேசினார்.

காற்று மாசு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுதொடர்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் பரஸ்பரம் மாறி மாறி புகார் தெரிவித்துள்ளன.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் காற்று மாசு காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன் காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 500க்கும் அதிகமாக காணப்பட்டதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், டெல்லியில் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

புகை போன்று காற்று மாசு சூழ்ந்துள்ளதால் மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. காற்று மாசு பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் முகமூடிகளை அணிந்து வெளியே சென்றனர்.

டெல்லி மட்டுமின்றி பஞ்சாப், ஹரியாணா, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. காற்று மாசு தொடர்பாக, டெல்லி, பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களிடையே மோதல் எழுந்தது.

''அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் விவசாயிகள் சாகுபடிக்கு பின் பயிர்களின் காய்ந்த சருகுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. ஆண்டுதோறும் இந்தப் பிரச்சினையை டெல்லி சந்தித்து வருகிறது'' என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இதற்கு பாஜக ஆளும் ஹரியாணா மாநிலம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஹரியாணா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில், ''ஹரியாணா மாநிலத்தில் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருட்களால் டெல்லி மக்களே பயன்பெறுகின்றனர். எனவே விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டிய கடமையும் டெல்லி அரசுக்கு உண்டு. விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டியது டெல்லி அரசே'' எனக் கூறினார்.

இந்த சூழ்நிலையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று (புதன் கிழமை) பாஜகவை சேர்ந்த ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சண்டிகர் நகரில் நடந்த இந்த சந்திப்பின் போது இரு மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் இதுபற்றி அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:

''டெல்லி மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்கு தீர்வு காண்பது தொடர்பாக ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாருடன் ஆலோசனை நடத்தினேன். சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒன்றிணைந்து பிரச்னைக்கு தீர்வு காண்போம்'' எனக் கூறினார்.

இதனிடையே, அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சண்டிகரில் காங்கிரஸ் மற்றும் அகாலிதள கட்சித் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x