Published : 14 Jul 2023 04:12 AM
Last Updated : 14 Jul 2023 04:12 AM

`சந்திரயான்-3' இன்று விண்ணில் பாய்கிறது: கோயிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு

சென்னை/ திருப்பதி: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. பல்வேறுகட்ட பயணங்களுக்கு பிறகு, சந்திரயான்-2 விண்கலம் 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. ராக்கெட் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. இவை 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும். இந்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் பயணம் வெற்றியடைய பிரார்த்தனை செய்து, திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை அருகே உள்ள செங்காளம்ம பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் நேற்று சிறப்பு வழிபாடுகள் செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x