Published : 11 Jul 2014 11:36 AM
Last Updated : 11 Jul 2014 11:36 AM

ஆளுநர்களை தூக்கியடிப்பதா?- பாஜக அரசு மீது பதவி விலகிய வைக்கம் புருஷோத்தமன் காட்டம்

மாநில ஆளுநர் பதவி அரசியலமைப்புப் பதவி. அரசு ஊழியர்களை தூக்கியடிப்பது போல் மாநில ஆளுநர்களை அரசு தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற முடியாது என மிசோரம் மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த வைக்கம் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநில ஆளுநர் வைக்கம் புருசோத்தமன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிவைத்தார்.

கடந்த 6-ம் தேதி, மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டது.

அதில், குஜராத் ஆளுநர் கமலா பெனிவால், மிசோரம் மாநில ஆளுநராக மாற்றப்படுவதாகவும், மிசோரம் ஆளுநர் வைக்கம் புருஷோத்தமன் நாகாலாந்து ஆளுநராக மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தன்னை நாகலாந்துக்கு மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வைக்கம் புருஷோத்தமன் ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்களை மாற்றும் தற்போதைய தேசிய ஜனநாயக அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ள புருஷோத்தமன், "மாநில ஆளுநர் பதவி அரசியலமைப்புப் பதவி. அரசு ஊழியர்களை தூக்கியடிப்பது போல் அரசியல் அமைப்பு உயர் பதவி வகிக்கும் மாநில ஆளுநர்களை அரசு தனது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்ற முடியாது. அரசியல் அமைப்பு பதவிக்கான மரியாதையை அளிக்க வேண்டும்.

மாநில ஆளுநர்களாக் பதவியேற்கும் பலர் முழுநேர அரசியல்வாதிகளாக இருந்திருந்தாலும், ஆளுநர் பதவியேற்ற பிறகு அரசியல்வாதியாக இருப்பதில்லை. ஆளுநர் பதவியின் தன்மையை உணர்ந்து விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டே நடப்பார்கள்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தன்னை ராஜினாமா செய்யுமாறு யாரும் நிர்பந்திக்கவில்லை என்றும், இருப்பினும் தன்னை பணியிட மாற்றம் செய்யும் முன்னர் முறையாக ஆலோசிக்கவில்லை என்பதாலேயே ராஜினாமா செய்கிறேன், என்றார்.

மாநில ஆளுநர்களை ராஜினாமா செய்ய மத்திய உள்துறை செயலர் கோரியிருக்கிறார். ஒரு ஆளுனரிடம் ராஜினாமா கோர உள்துறை செயலருக்கு அதிகாரம் எங்கிருந்து வந்தது என புருஷோத்தமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வைக்கம் புருஷோத்தமன் கேரள சட்டசபை சபாநாயகர், கேரள மாநில அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x