Last Updated : 03 Jul, 2014 08:59 AM

 

Published : 03 Jul 2014 08:59 AM
Last Updated : 03 Jul 2014 08:59 AM

சுதாகரன் திருமணச் செலவை செய்தது சிவாஜி குடும்பத்தாரும் அதிமுகவினரும்தான்: சொத்து குவிப்பு வழக்கில் ஜெ.வழக்கறிஞர் வாதம்

சுதாகரனின் திருமணத்திற்கான செலவுகளை நடிகர் சிவாஜியின் குடும்பத்தாரும் அதிமுகவை சேர்ந்தவர்களுமே செய்தனர். ஜெயலலிதா எந்த செலவையும் செய்யவில்லை என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார் புதன்கிழமை வாதிட்டார்.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் நடைபெற்றது.

வழக்கறிஞர் பி.குமார் 10-வது நாளாக தனது இறுதிவாதத்தை முன்வைத்தார்.

‘ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான காலணிகள், கைக்கடிகாரங்கள், உடைகள் உள்ளிட்டவற்றை மிகைப் படுத்தி மதிப்பிட்டு சொத்து மதிப்பை அதிகமாக காட்டியுள்ளனர்.

ஒருவர் பயன்படுத்தும் பொருட் களை சொத்தாக கருத முடியாது என பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமும், பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கி உள்ளன. எனவே வழக்கில் சொத்துக்களாக சேர்க்கப்பட்டுள்ள உடைகள், கைக்கடிகாரங்கள், காலணிகள் உள்ளிட்டவற்றை விடு விக்க வேண்டும்.

முற்றிலும் தவறானது

சுதாகரனின் திருமணத்திற்கு சென்னையின் பல பகுதிகளில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு கள், மேடைகள்,விளம்பர தட்டிகள், மின் விளக்குகள் அனைத்தையும் ஜெயலலிதா தமது செலவில் ஏற்பாடு செய்ததாக வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது.

அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதாவின் வீட்டுத் திருமணம் என்பதால் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அலங்கார வளைவுகளையும், மேடைகளையும் ஏற்பாடு செய்திருந்தனர் என்பதை தங்களுடைய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா செலவழிக்கவில்லை

சுதாகரனின் திருமணத்திற்காக செய்யப்பட்ட அனைத்து செலவு களையும் அவரது மனைவியின் குடும்பமான நடிகர் சிவாஜியின் குடும்பத்தாரே செய்தனர். ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட யாரும் சுதாகரனின் திருமணத்திற்கு பணம் செலவழிக்கவில்லை. இது தொடர்பாக சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் அளித்த வாக்குமூலத்தில் தெளிவாக கூறியுள்ளார்.

தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் இதனை ஏற்கவில்லை. ஜெயலலிதாவின் சொத்துமதிப்பை உயர்த்தி காட்ட வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் செய்த செலவினங்களையும் ஜெயலலிதா வின் சொத்தாக வழக்கில் பொய்யாக காட்டியுள்ளனர்'' இவ்வாறு வழக்கறிஞர் குமார் வாதிட்டார். வியாழக்கிழமையும் அவரது இறுதி வாதம் தொடரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x