Last Updated : 30 Jun, 2023 01:06 PM

 

Published : 30 Jun 2023 01:06 PM
Last Updated : 30 Jun 2023 01:06 PM

மணிப்பூர் மகளிரின் போராட்ட முகம் - பிரிட்டிஷ் காலம் தொட்டு

போராட்டக் களத்தில் மணிப்பூர் மகளிர்

"வரலாற்றைப் பற்றி ஏதேனும் தெரிந்த எவராக இருந்தாலும், பெரிய சமூக மாற்றங்கள் பெண் சக்தியில்லாமல் சாத்தியமில்லை என்பதை அறிந்தவர்களாகவே இருப்பார்கள்" - கார்ல் மார்க்ஸ்.

1868 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி அவர் இதை எழுதியபோது எதிர்காலத்தில் ஒரு டிசம்பர் 12 பெண் சக்தியை நிரூபிக்கும் நாளாக இருக்கும் என்று நிச்சயமாக அறிந்திருக்க மாட்டார். அவரது கணிப்பு மணிப்பூருக்கு மிகவும் பொருந்திப் போகிறது அன்றும் என்றும்.

அப்படியே நாம் 2023 ஜூன் 17க்கு வருவோம். "பெண்கள் என்பதால் நாங்கள் மனிதாபிமானத்தோடு அணுகுகிறோம். அதனால் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்று அர்த்தமில்லை.." என்று ஓர் எச்சரிக்கையுடன் கடந்த சனிக்கிழமை இந்திய ராணுவத்தின் ஸ்பியர்கார்ப்ஸ் படைப்பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டது.

இந்த எச்சரிக்கை தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. காரணம் உலகளவில் பெரும்பலம் பொருந்திய இந்திய ராணுவத்துக்கு ஒரு பெண்கள் குழு சவாலாக இருக்கிறதா என்ற ஆச்சரியமும் கேள்வியும்!?

மணிப்பூர் பெண்களின் இந்த போராட்ட முகத்தை ஆராய்ந்தால் அவர்கள் இவ்வாறாக சமூக இயக்கமாக செயல்படுவதன் பின்னணி சற்று நீண்டதாக உள்ளது. பிரிட்டிஷ் காலம் தொட்டே இவர்களின் போராட்ட முகம் தடம் பதித்துள்ளது.

யார் இந்த மீரா பைபிக்கள்: 1970களின் பிற்பாதியில் மணிப்பூரில் ஒரு சமூக இயக்கமாக உருவானது மீரா பைபி இயக்கம். மீரா பைபி (The Meira Paibis) என்பதற்கு விளக்கேந்திய பெண்கள் என்று அர்த்தம். இவர்கள் இரவு நேரங்களில் சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகச் செல்லும்போது கைவிளக்குகளை சில நேரங்களில் தீப்பந்தங்களை ஏந்திச் செல்வர். அதனாலேயே மீரா பைபி என்ற பெயர் இந்த சமூக இயக்கத்தினருக்கு கிடைத்தது.

இவர்களை மணிப்பூரின் தாய்மார்கள் (இமாஸ்) என்றும் அழைக்கின்றனர். இவர்கள் மேதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இல்லத்தரசிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், மருத்துவர்கள் என சமூகத்தின் அனைத்துப் படிநிலைகளில் உள்ள பெண்களும் இந்த இயக்கத்தில் இருக்கின்றனர். இது ஒரு சக்திவாய்ந்த சமூக இயக்கமாக அறியப்படுகிறது. போதை ஒழிப்பு, ஆயுத்தப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் அடக்குமுறைகள், போலி என்கவுன்ட்டர்கள் ஆகியனவற்றை எதிர்த்த குழுவாக அறியப்படுகிறது. இருப்பினும் இவர்கள் அமைப்பு ரீதியாக வலுவான கட்டமைப்போ அல்லது அரசியல் சார்போ கொண்டிருக்கவில்லை.

பிரிட்டிஷ் காலத்தில் மகளிர் போராட்டம்.. வளமான மணிப்பூர் மாநிலத்திலிருந்து உயர்தர அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சில வியாபாரிகளை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இடைத்தரகர்களாகப் பயன்படுத்தினர். அந்த நடைமுறையால் நிலத்தில் பாடுபட்டும் பலனில்லாமல் தவித்தனர் மணிப்பூர் விவசாயிகள். அதுமட்டுமல்லாது கடுமையான பட்டினியும் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வெகுண்டெழுந்த மணிப்பூர் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். நுபி லான் (Nupi Lan) என்ற பெண்கள் இயக்கத்தின் நெருக்கடியைத் தாக்குப் பிடிக்க இயலாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களின் அரிசி கொள்முதல் உத்தரவை திரும்பப்பெற்றனர். 1939 டிசம்பர் 12 ஆம் தேதி இந்தப் போராட்டம் முதன்முதலாக நடந்த நிலையில் இன்றளவும் மணிப்பூர் மக்கள் டிசம்பர் 12-ஐ 'மகளிர் போர்' தினமாக அனுசரிக்கின்றனர்.

டிசம்பர் 29, 1980: இந்தத் தேதியும், ஆண்டும் மீரா பைபி இயக்கத்தில் மிக முக்கியமான நாளாகும். செப்டம்பர் 8, 1980ல் மணிப்பூரில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (ஆஃப்ஸ்பா) அமலுக்கு வந்த நிலையில் அங்கே ராணுவம் பல்வேறு கெடுபிடிகளைக் காட்டத் தொடங்கியது. அதன் நீட்சியாகவே டிசம்பர் 29, 1980 அன்று இபோம்சா லாஷிராம் என்ற நபரைத் தேடி ராணுவத்தினர் ஊருக்குள் திரண்டு வந்தனர். ஆயுதக் குழுக்களுடன் லாஷிராமுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்ய முயன்றனர். ஆனால், அவர்களிடமிருந்து மீரா பைபிக்கள் லாஷிராமை மீட்டனர்.

மணிப்பூர் ஆயுதக் குழுக்களும் பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருமே பாதுகாப்பு அரணாக ராணுவம் நம்பியதால் அங்கே ஆப்ஸ்பா அமலாக்கம் செய்யப்பட்டது. ஆஃப்ஸ்பா-வின் பிடி இறுக இறுக மீரா பைபிக்களின் கைகளும் கட்டுப்பாடுகளை சந்தித்தன. ஆனாலும் மீரா பைபிக்கள் தங்களின் போராட்ட முறையை தளர்த்தவில்லை. இரவு நேர ரோந்து, கைது செய்யப்பட்டவர்களை முறையாக போலீஸில் ஒப்படைக்கச் செய்தல், சில நேரங்களில் நிபந்தனையின்றி அவர்களை விடுவிக்கச் செய்தல், ராணுவத்தினர் ஊருக்குள் நுழைய இயலாத வகையில் அரணாக இருத்தல். வழியில் பள்ளங்களைத் தோண்டி வைத்தல் என பல முனைகளில் இயங்கினர்.பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் படை வீரர்கள் மூலம் சில பெண்களை கொன்றும் கூட அவர்களால் அந்த பெண்களை கட்டுப்படுத்த இயலவில்லை. அதனாலேயே அவர்கள் அரிசி கொள்முதலைக் கைவிட்டுச் சென்றனர்.

இவ்வாறாக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மணிப்பூர் பெண்கள் காட்டிய துணிச்சலைப் பாராட்டும் விதமாக, அந்தத் துணிச்சலை அங்கீகரிக்கும் விதமாக ராணுவமும் அவ்வப்போது மீரா பைபிக்களின் நிபந்தனைகளுக்கு செவிமடுத்து வந்தது. இன்றளவும் அப்படித்தான் ராணுவம் சில நேரங்களில் அவர்களுக்கு சலுகைகள் காட்டிவருவதாகத் தெரிகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆயுதக் குழுவைச் சேர்ந்த 12 பேர் மீண்டும் ஒப்படைக்கப்பட்டனர்.

மணிப்பூரில் மே 3 ஆம் தேதி முதல் கலவரம் நடந்துவரும் சூழலில் மே 30ஆம் தேதி மீரா பைபி குழு பிரதிநிதிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். அந்த நிகழ்வின் புகைப்படத்தைப் பகிர்ந்த அமித் ஷா, "மணிப்பூரின் பெண் தலைவர்களுடன் (மீரா பைபிக்களுடன்) ஆலோசனை நடத்தினேன். மணிப்பூர் சமூகத்தின் நலனில் பெண்களின் முக்கியத்துவத்தை அவர்களிடம் வலியுறுத்தினேன். மாநிலத்தின் வளத்தை, அமைதியை உறுதி செய்வதில் அவர்களுக்கும் பங்கு இருப்பதை சுட்டிக் காட்டினேன்" என்று பதிவிட்டிருந்தார்.

மதுவிலக்கு, போதை ஒழிப்புப் பிரச்சாரம்: 1970களின் தொடக்கத்தில் மணிப்பூர் பெண்கள் மதுவிலக்குப் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். வெறும் 20 லட்சம் பேரே கொண்ட ஒரு மாநிலத்தில் 65 வெளிநாட்டு மதுபானக் கடைகள் இருந்தன. இதனால் மணிப்பூர் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். போதை வஸ்துக்கள், மதுப்பழக்கம் என மணிப்பூர் ஆண்கள், இளைஞர்கள், குழந்தைகள் அடிமையாக பெண்கள் போராட்டக் களத்தில் குதித்தனர். அரசாங்கத்தின் சில கெடுபிடிகள் கள்ளச்சந்தைகள், ஊழல், விலையுயர்வுக்கு மட்டுமே வழிவகுப்பதாக இருந்தன. பெண்களின் போராட்டங்களுக்கு பலன் கிடைத்தது. அரசாங்கம் மிகக் கடுமையான சட்ட திட்டங்களக் கொண்டுவந்தது. மணிப்பூர் போதையிலிருந்து மீளத் தொடங்கியது.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக: மணிப்பூரில் ஆயுதக்குழு தடுப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் போலி என்கவுன்ட்டர்கள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மனித உரிமைகள் அமைப்புகள் மணிப்பூரில் 1,500-க்கும் மேற்பட்டோர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அது தொடர்பான பொதுநல மனுக்கள் சிலவற்றை விசாரணைக்கு ஏற்றது. அவற்றிலிருந்து 6 வழக்குகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றை உள்ளூர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது அதிகார துஷ்பிரேயோகம் உறுதியானது. அதேவேளையில் மீரா பைபிஸ் குழுவினர் பலர் மீதும் வழக்குகள் பாய்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இருந்தாலும் அவர்கள் ஓயவில்லை.

அது ஒரு சறுக்கல் தான்.. மீரா பைபிக்கள் பல்வேறு சமூகப் போராட்டங்களை முன்னெடுத்தாலும் கூட அவர்கள் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா ஆஃப்ஸ்பா எதிர்ப்புப் போராட்டத்துக்கு சற்றும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இது அவர்களின் வரலாற்றில் ஒரு பலவீனமாகவே அறியப்படுகிறது. இரோம் ஷர்மிளா பலமுறை வெளிப்படையாகவே மீரா பைபிக்களின் ஆதரவைக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாணப் போராட்டம்: ராணுவத்துக்கு எதிராக மணிப்பூரின் தாய்மார்கள் என்றழைக்கப்படும் இமாஸ் குழுவினர் நிர்வாணப் போராட்டம் நடத்தினர். 2004 ஆம் ஆண்டு மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ராணுவ முகாம் முன்னால் திரண்ட 12 பெண்கள் ஆடைகளைக் கலைந்துவிட்டு 'இந்திய ராணுவமே எங்களை பலாத்காரம் செய்' என்று பதாகையை ஏந்தி நின்று சர்வதேச கவனம் ஈர்த்தனர். 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி இரவு மனோரமா என்ற 32 வயது பெண் ஆஃப்ஸ்பா படையினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் சில நாட்கள் கழித்து அவர் வயல்வெளியில் குண்டு துளைத்த நிர்வாண தேகத்துடன் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் பின்னர் உறுதியானது. இதனை எதிர்த்து தான் அந்த நிர்வாணப் போராட்டத்தை மணிப்பூர் பெண்கள் முன்னெடுத்தனர். 45 நிமிடங்கள் போராட்டம் நடந்தது. ராணுவ முகாமில் பாதுகாப்புப் பணியிலிருந்த வீரர்கள் துப்பாக்கிகளைக் கீழே இறக்கி தலை குணிந்ததாக போராட்டக்காரர்களில் ஒரு பெண் பின்னாளில் பேட்டியளித்தார்.

எடுபடாமல் போன ராணுவத்தின் சகாயம்.. ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்துவதில் சவாலாக இருந்த பெண்களை எதிர்கொள்வதில் ராணுவம் பல்வேறு முயற்சிகளையும் எடுத்தது. ஆபரேஷன் சார்ம் என்ற பெயரில் ஒரு முயற்சியை மேற்கொண்டது. அதன்படி பெண்களுக்கு டிவி, வீட்டு உபயோகப் பொருட்கள் எனக் கொடுக்கத் தொடங்கியது. சில நேரங்களில் ரொக்கப் பணமாகவும் கொடுத்தது. அலுவலகங்கள் அமைத்து தங்களின் குழுவை முறைப்படுத்தி சமூக பாதுகாப்புப் பணிகளை மட்டுமே செய்யும்படி வலியுறுத்தியது. ஆனால் ஆயுதக் குழுக்கள் எச்சரிக்கை விடுக்க பெண்கள் பின்வாங்கிவிட்டனர். அதேபோல் பல்வேறு காலக்கட்டங்களிலும் பல அரசியல் கட்சிகள் மணிப்பூர் பெண்கள் சமூக இயக்கங்களை தங்கள் பக்கம் இழுக்க தூண்டிலிட்டும் அவர்கள் அதில் இன்றளவும் சிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் ராணுவத்துக்கு சவாலாக போராடும் குழுக்களுக்கு அரணாக நிற்கின்றனர் மணிப்பூர் பெண்கள். இதுவரை 100க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோன நிலையில் ஆயுதக் குழுக்களை ஒடுக்க ராணுவம் தீவிரம் காட்டிவருகிறது. அதனாலேயே தனது சகாயப் போக்கிலிருந்து சற்றே விலகி தற்போது எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது. சமூக மாற்றங்களுக்காகப் போராடுவது வேறு, அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்களை ஆதரிப்பது வேறு என்று எச்சரித்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x