Published : 26 Jun 2023 12:16 PM
Last Updated : 26 Jun 2023 12:16 PM

இமாச்சலப்பிரதேசத்தில் கன மழை | திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200 பேர் தவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

மண்டி: இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள பாகிபுல் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் 200 பேர் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் மண்டி - குலு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டி மாவட்டத்தின் ஆட் அருகில் உள்ள கோடிநாலாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் சாலைகள் மூடப்பட்டன. இதே போல் பாகிபுல் பகுதியில் உள்ள ப்ரஷார் ஏரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் மண்டி-பாகிபுல் சாலையில் பாகி பாலம் அருகே 200 பேர் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து மண்டி மாவட்டதின் பதார் டிஎஸ்பி, சஞ்சீவ் சூட் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறுகையில், "மண்டி மாவட்டத்தின் ப்ரஷார் ஏரி பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பாகி பாலம் அருகே, உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணிகள் என 200 பேர் சிக்கியுள்ளனர்" இவ்வாறு தெரிவித்தார்.

மண்டி - ஜோகிந்தர் தேசிய நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளது. இங்கு நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதால் அந்த சாலை வழியாக செல்லும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாலைகளில் தங்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகவெடிப்பு காரணமாக பெய்த மழையினைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பியாஸ் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. சிம்லாவின் பிறபகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

முன்னதாக, இமாச்சாலப்பிரதேசத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுகுறித்த அறிக்கையில், ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் சமவெளி, தாழ்வான மற்றும் நடு மலைப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழைபெய்யக்கூடும். காங்ரா, மண்டி, சோலன் போன்ற மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்படலாம்" என்று தெரிவித்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x