Published : 23 Jun 2023 06:19 AM
Last Updated : 23 Jun 2023 06:19 AM

கல்வி துறையில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கும்: ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து

புனே: கல்வித் துறையில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பு தொடர்பான மாநாடுகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன்படி மகாராஷ்டிராவின் புனே நகரில் ஜி-20 உறுப்பு நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது: மனித குல நாகரிகத்தின் அஸ்திவாரம் கல்வி ஆகும். அந்த வகையில் நாட்டின் வளர்ச்சி, அமைதி, வளமான எதிர்காலத்துக்கு அந்தந்த நாடுகளின் கல்வி அமைச்சர்கள் வழிகாட்டிகளாக விளங்குகின்றனர். உண்மையான அறிவு, பணிவை கற்றுத் தருகிறது. பணிவில் இருந்து தகுதி பிறக்கிறது. தகுதியில் இருந்து ஒருவருக்கு செல்வம் கிடைக்கிறது. செல்வம் இருக்கும் ஒருவர், மக்களுக்கு நன்மைகளை செய்கிறார். இதுவே மனநிறைவைத் தருகிறது.

இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படை கல்வியறிவை வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இந்த இலக்கை எட்ட தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்தி வருகிறோம். இந்திய மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பது எங்களது லட்சியம். அதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 9-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் பயிலும் மாணவர்களுக்காக டிஜிட்டல் வாயிலாக அனைத்து படிப்புகளையும் போதித்து வருகிறோம். இதன்மூலம் நாட்டின் குக்கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவியரும் தரமான கல்வியைப் பெற முடிகிறது. இந்த திட்டத்தின் 3.4 கோடி மாணவ, மாணவியர் பலன் அடைந்து வருகின்றனர்.

தீக்சா கல்வி திட்டத்தின் கீழ் கிராமப்புற மாணவர்களுக்கு தொலைநிலை வாயிலாக கல்வி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 29 இந்திய மொழிகள், 7 வெளிநாட்டு மொழிகள் வாயிலாக கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த கல்வி நடைமுறை அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் இளைஞர்களை தயார்படுத்த அவர்களின் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். இதற்காக இந்தியாவில் இளைஞர்களின் திறன்களை கண்டறிந்து மேம்படுத்த ‘ஸ்கில் மேப்பிங்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல ஜி-20 நாடுகள் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அடுத்ததாக கல்வித் துறையில் செயற்கை நுண்ணறிவு மிக முக்கிய பங்கு வகிக்கும். இந்த செயற்கை நுண்ணறிவால் பல்வேறு சாதகங்கள் இருந்தாலும் சில பாதகங்களும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த சவாலை எதிர்கொள்ள ஜி-20 நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இந்தியாவில் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x