Last Updated : 22 Oct, 2017 11:40 AM

 

Published : 22 Oct 2017 11:40 AM
Last Updated : 22 Oct 2017 11:40 AM

மத்திய அரசின் பெயரில் போலி இணையதளம்: பிரதமர் அலுவலகம் தலையிட்டதால் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு

மத்திய அரசின் பெயரில் இயங்கிவந்த ஒரு இணையதளம், வேலை தருவதாக இளைஞர்களை ஏமாற்றி வந்துள்ளது. இதைக் கண்டறிந்து பிரதமர் அலுவலகம் தலையிட்டதால் அதன் மீது டெல்லி அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

மத்திய அரசின் சின்னத்துடன் ‘கிஸான் சேவா கேந்திரா’ (kisansevakendra.org) என்ற இணையதளம் கிஸான் கால் சென்டர் (கேசிசி) எனும் பெயரில் 2012-ம் ஆண்டு முதல் இயங்கி வந்துள்ளது. கேசிசி, இளைஞர்களின் கைப்பேசி எண்களை தொடர்புகொண்டு போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வழங்கி வந்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை ரூ.900 செலுத்தி பெறுமாறும், இதர விவரங்கள் தங்களது இணையதளத்தில் இருப்பதாகவும் கூறி வந்தது.

இதன் அடிப்படையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியவர்களை கைப்பேசியில் தொடர்புகொண்டு, ‘தாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். இதற்கு வைப்புத்தொகை செலுத்த வேண்டும்’ என கூறி உள்ளனர். இதை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் பணம் கட்டியுள்ளனர். பின்னர் அது மோசடி என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சுமார் 1,000 பேர் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவர்களில் சிலர் பிரதமர் அலுவலகத்துக்கும் புகார் அனுப்பி உள்ளனர். அதன் பிறகு அந்த இணையதளம் இளைஞர்களை ஏமாற்றி வருவதை பிரதமர் அலுவலகம் உறுதி செய்தது. அதன்பின், பிரதமர் அலுவலக உத்தரவுப்படி, டெல்லி போலீஸாரிடம் மத்திய வேளாண் அமைச்சகம் புகார் அளித்தது. அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், அந்த இணையதளத்தை முடக்கி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து இணையதள குற்றப் பிரிவு (சைபர் கிரைம்) துணை ஆணையர் அனிஷ் ராய் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த மோசடி திட்டத்தின் கீழ் ரூ.9,000, ரூ.15,000 மற்றும் ரூ.25,000 என வைப்புத்தொகை பெற்று ஏமாற்றி உள்ளனர். இதற்காக அவர்கள் பயன்படுத்திய கைப்பேசி எண்களும் தற்போது வேலை செய்யவில்லை. இந்த விவகாரத்தில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம்” என்றார்.

மத்திய வேளாண் துறை சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ‘கிஸான் கால் சென்டர்’ இயங்கி வருகிறது. இது, பயிர், உரம் உட்பட பல்வேறு சாகுபடி தொடர்பான ஆலோசனைகளை விவசாயிகளுக்கு இலவசமாக அளித்து வருகிறது. நாட்டின் 14 இடங்களில் செயல்பட்டு வரும் இந்த கால் சென்டரை கட்டணம் இல்லாமல் அனைவரும் தொடர்புகொள்ள 1800-180-151 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x