Last Updated : 06 Oct, 2017 07:55 AM

 

Published : 06 Oct 2017 07:55 AM
Last Updated : 06 Oct 2017 07:55 AM

எம்.பி. ஓய்வூதியத்தை விட்டுத்தரும் நடிகர் சரத்குமாரின் முடிவை மாநிலங்களவை ஏற்றது

மாநிலங்களவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை விட்டுத்தரும் நடிகர் சரத்குமாரின் முடிவை மாநிலங்களவை அலுவலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் ஆர்.சரத்குமார் திமுக உறுப்பினராக இருந்தார். கடந்த ஜூலை 25, 2001-ல் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவியில் மே 31, 2006 வரை தொடர்ந்த சரத்குமார் பிறகு ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் மாதந்தோறும் மாநிலங்களவை உறுப்பினருக்கான ஓய்வூதியத் தொகை ரூ.20,000 பெற்று வந்தார். இதை அரசுக்கு விட்டுத்தர முடிவு செய்த சரத்குமார், கடந்த மாதம் 15-ம் தேதி மாநிலங்களவை செயலாளர் தேஷ் தீபக் வர்மாவுக்கு கடிதம் எழுதினார்.

‘தி இந்து’வுக்கு கிடைத்த அந்தக் கடிதத்தில், “முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் வழங்க மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் சில ஆயிரம் கோடி செலவிடுவதாக அறிந்தேன். இந்த ஓய்வூதியம், வேறு எந்த வருமானமும் இல்லாதவர்களுக்கு போய் சேர்வதே சரியாக இருக்கும். என்னை போல் வேறு வருமானம் உள்ளவர்களுக்காக அரசு செலவிடும் ஓய்வூதியத் தொகை, அவர்களிடம் முறையாகப் பேசி நிறுத்தப்பட வேண்டும்.

எனது ஓய்வூதிய பலன்களை நிறுத்தும்படி தங்கள் அலுவலகத்திற்கு உத்தரவிடுமாறு கோருகிறேன். எனது தாய்நாடு மீதான அன்பின் காரணமாக இதை செய்கிறேன். பல லட்சம் மக்கள் தங்களின் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுத்தர முன்வந்துள்ளனர். அதுபோல் எனது ஓய்வூதியத்தை விட்டுத்தர முன்வந்துள்ளேன். இதை மற்ற முன்னாள் உறுப்பினர்களும் பின்பற்ற முன்வந்தால் ஆண்டுதோறும் நாடு சில ஆயிரம் கோடியை சேமிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள தேஷ் தீபக் வர்மா, கடந்த மாதம் செப்டம்பர் 25-ம் தேதி முதல் சரத்குமாருக்கு ஓய்வூதியம் அளிப்பதை நிறுத்தும்படி தமது அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றவர்கள், அதன் பதவிக்காலத்தை நிறைவு செய்யாவிடினும் ஓய்வூதியம் பெறலாம். தற்போது ரூ.20,000 அளிக்கப்பட்டு வரும் இத்தொகை உறுப்பினரின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினருக்கு பாதியாக அனுப்பப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பிறகு சரத்குமார் தமிழக எம்எல்ஏவாக இருந்தார். அப்போது அவரது எம்எல்ஏ ஊதியத்தில், ஓய்வூதியத் தொகை பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது 1952 முதல் ஓய்வுபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தார் என மொத்தம் 1,766 பேருக்கு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இவர்களில் ஓய்வூதியத்தை விட்டுக்கொடுத்த முதல் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் நடிகர் சரத்குமார் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x