Published : 01 Oct 2017 12:07 PM
Last Updated : 01 Oct 2017 12:07 PM

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய இனிவரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலில் விவிபாட் இயந்திர வசதி: தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

‘‘இனி வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிய ஒப்புகை சீட்டு இயந்திரம் (விவிபாட்) பயன்படுத்தப்படும்’’ என்று தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும், குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்குகள் பதிவாவதாகவும் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் புகார் தெரிவித்தன.

இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய விவிபாட் இயந்திரம் தேர்தலின் போது பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி, இனி வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் எல்லா வாக்குச் சாவடிகளிலும் விவிபாட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இனிவரும் தேர்தல்களில் விவிபாட் இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பாக எல்லா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

இதற்காக கடந்த 2015-ம் ஆண்டே 67 ஆயிரம் விவிபாட் இயந்திரங்களை கொள்முதல் செய்ய தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்தது. அதில் 33,500 இயந்திரங்கள் வந்துவிட்டன என்று மத்திய சட்டத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கிறது. அந்தத் தேர்தல்களில் பயன்படுத்துவதற்காக கூடுதலாக 30 ஆயிரம் விவிபாட் இயந்திரங்களை தேர்தல் ஆணையம் வாங்க உள்ளது.

விவிபாட் இயந்திரம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன், விவிபாட் எனப்படும் இயந்திரம் இணைக்கப்படும். வாக்காளர் வாக்களித்தவுடன், அவர் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார் என்பது கட்சி சின்னத்துடன் அச்சிட்ட தாள் வெளிவரும். அதை வாக்காளர் சரி பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் வாக்குப் பதிவில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும். ஆனால், ஒப்புகை சீட்டை வாக்காளர் வெளியில் கொண்டு செல்ல முடியாது. விவிபாட் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் தாள், அருகில் உள்ள பெட்டியில் தானாக விழும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x