Published : 10 Jun 2023 04:48 PM
Last Updated : 10 Jun 2023 04:48 PM

“எங்கள் பிரச்சினை தீர்ந்தால் மட்டுமே ஆசிய போட்டிகளில் பங்கேற்போம்” - சாக்‌ஷி மாலிக் திட்டவட்டம்

சாக்‌ஷி மாலிக் | கோப்புப்படம்

புதுடெல்லி: "தற்போது நாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே இந்த ஆண்டு ஆசிய போட்டிகளில் பங்கேற்போம்" என்று மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் ஹரியானா மாநிலத்தின் சோனிபட்டில் சனிக்கிழமை காப் (Khap) தலைவர்களுடன் மகாபஞ்சாயத்து நடத்தினர். மல்யுத்த வீராங்கனை, வீரர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது நடந்த விவாதம் முழுவதையும் காப் தலைவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்று பஜ்ரங்க் புனியா தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சாக்‌ஷி மாலிக், "தற்போது நாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்த வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் மனதளவில் நாங்கள் எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம் என்று உங்களால் புரிந்து கொள்ள முடியாது" என்றார்.

அவரிடம் மல்யுத்த வீரர்களிடையே பிளவு நிலவுவதாக வரும் செய்திகள் குறித்து கேட்டபோது, “நான் உங்களுக்கு ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். நான், வினேஷ் (போகத்), பஜ்ரங் மூவரும் ஒன்றுதான். ஒன்றாகவே இருப்போம்" என்றார்.

இதனிடையே, பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை எப்படிச் செய்தார் என்பதை விவரித்துக் காட்டும் பொருட்டு வீராங்கனை சங்கீதா போகத்தை குற்றம்சாட்டப்படுள்ள பிரிஜ் பூஷன் வீட்டுக்கு டெல்லி போலீஸ் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் பெண் போலீஸ் அதிகாரிகள் சங்கீதா போகத்தை பிரிஜ் பூஷன் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அங்கு அரை மணிநேரம் இருந்தனர். அப்போது சங்கீதாவுக்கு செய்யப்பட்ட துன்புறுத்தல்களை விவரிக்குமாறு கேட்டுக்கொண்டனர் என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சமரசம் செய்தவதற்காக மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் வீட்டுக்கு சென்றாக வெளியான செய்தி குறித்து போராட்டத்தின் முன்னணியில் இருக்கும் வீராங்கனைகளில் ஒருவரான வினேஷ் போகத் வருத்தம் தெரிவித்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுதான் பிரிஜ் பூஷனின் பலம், அவர் தனது உடல்பலம், அரசியல் பலம், பொய்யான செய்திகளைப் பரப்புவதன் மூலமாக மல்யுத்த வீராங்கனைகளை துன்புறுத்துகிறார். அவர் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டும். எங்களை நொறுக்குவதற்கு பதிலாக போலீசார் அவரைக் கைது செய்தால் மட்டுமே நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

போலீஸாரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், புரிந்துகொள்ள முடியாததாகவும் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது. டெல்லி போலீஸாரின் இந்த நடவடிக்கை குறித்தும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவாலை திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x