Last Updated : 08 Oct, 2017 05:49 PM

 

Published : 08 Oct 2017 05:49 PM
Last Updated : 08 Oct 2017 05:49 PM

புருவங்கள், கூந்தல் முடியை அழகுபடுத்த வெட்டுவது இஸ்லாத்துக்கு எதிரானது: தியோபந்த் மதரஸாவின் ‘ஃபத்வா’ விளக்கம்

ஆண்களும், பெண்களும் தம்மை அழகுபடுத்திக் கொள்ள தங்கள் புருவங்கள் மற்றும் கூந்தல்முடியை வெட்டுவது இஸ்லாத்திற்கு எதிரானது என 'ஃபத்வா' அளிக்கப்பட்டுள்ளது. இதை உ.பி.யின் தாரூல் உலூம் மதரஸாவின் ஒரு துறைத் தலைமை மவுலானா அளித்துள்ளார்.

உ.பி.யின் மேற்குப்பகுதியில் இருப்பது சஹரான்பூர் மாவட்டத்தின் தியோபந்த். இங்கு உலகப் புகழ் வாய்ந்த பழம்பெரும் மதரஸா அமைந்துள்ளது. இஸ்லாத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு இங்குள்ள மவுலானாக்களால் அளிக்கப்படும் 'ஃபத்வா' எனும் விளக்கம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில், தியோபந்தை சேர்ந்த ஒருவர் பெண்கள் தன் புருவம் மற்றும் கூந்தல் முடியை அழகுபடுத்துவது குறித்து விளக்கம் கேட்டு எழுதியிருந்தார். இதன் மீது ஃபத்வா அளித்த தாரூல் இப்தா துறையின் தலைவரான மவுலானா முப்தி அர்ஷத் பரூக்கி விளக்கம் அளித்துள்ளார்.

அதில் மவுலானா பரூக்கி கூறுகையில், ''கண் புருவங்கள் மற்றும் கூந்தல் முடியை அழகுபடுத்தும் நோக்கில் வெட்டுவது இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. இது அதிகம் நீண்டுவிட்ட காரணத்தால் குறைக்க வேண்டி வெட்டலாமே தவிர அழகுபடுத்திக் கொள்ளக் கூடாது. இது ஆண்களுக்கும் பொருந்தும்'' எனத் தெரிவித்துள்ளார்.

இவரது ஃபத்வாவிற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த மதரஸாவின் மற்றொரு மவுலானாவான லுத்புர் ரஹ்மான் சாதிக் காஸ்மி கூறுகையில், ''அழகு நிலையங்களுக்கு பெண்கள் செல்வது தவறு ஆகும். இந்த ஃப்த்வாவின் மூலம் அவர்கள் தம் வெளிப்புறமாக அழகுபடுத்திக் கொள்வது தவறு என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோல், பெண்கள் தம்மை அழகுபடுத்திக் கொள்வதன் மீது தியேபந்தின் தாரூல் உலூம் மதரஸாவினர் ஃபத்வா அளிப்பது புதிதல்ல. ஆனால், இதை உ.பி. பெண்களின் ஒரு பகுதியினர் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, அவர்கள் மவுலானாக்களின் ஃபத்வாக்களை எதிர்த்து விமர்சனம் செய்வது வழக்கமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x