Published : 07 Jun 2023 05:00 AM
Last Updated : 07 Jun 2023 05:00 AM

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடலை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது - எய்ம்ஸ் மூத்த மருத்துவர் தகவல்

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்துக்கு 100-க்கும் மேற்பட்ட உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் அவற்றை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது. எம்பாமிங் பலன் தராது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறினார்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 3 ரயில்கள் விபத்தில் சிக்கியதில் 278 பேர் உயிரிந்தனர். 1,100 பேர் காயம் அடைந்தனர்.

இறந்தவர்களில் 100-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் விபத்தில் பல உடல்கள் துண்டிக்கப்பட்டும் சிதைந்தும் இருக்கும் நிலையில் அவற்றை உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக இன்னும் எவ்வளவு காலத்துக்கு வைத்திருப்பது என அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர்.

குடும்பத்தினருக்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில், உடல்கள் எம்பாமிங் செய்யப்பட்டு வருகின்றன. டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே உடல்கள் சேதம் அடைந்திருப்பதால் அதிகாரிகள் காட்டும் புகைப்படங்களை கொண்டு அவற்றை அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உடற்கூறியல் துறை தலைவர் ஏ.ஷெரீப் கூறும்போது, “சேதமடைந்த உடல்களை நீண்டகாலம் வைத்திருக்க முடியாது. எம்பாமிங் செய்தாலும் அதற்கு பலன் கிடைக்காது. ஏனென்றால் ஒருவரின் உடலை, இறந்த 12 மணி நேரத்துக்குள் எம்பாமிங் செய்தால் மட்டுமே அதற்கு பலன் கிடைக்கும்” என்றார்.

புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை 123 உடல்கள் கொண்டு வரப்பட்டன.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநர் அசுதோஷ் பிஸ்வாஸ் கூறும்போது, “விபத்துக்குப் பிறகு 30 மணி நேரத்துக்குப் பிறகே எங்கள் மருத்துவமனைக்கு உடல்கள் வந்தன. உடல்கள் குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x