Published : 06 Jun 2023 06:50 AM
Last Updated : 06 Jun 2023 06:50 AM

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வாழ்க்கை முறை வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி

புதுடெல்லி: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்புவிடுத்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசியதாவது:

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதே இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் ஆகும். கடந்த 2018-ம் ஆண்டிலேயே இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் சுமார் 30 லட்சம்டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. இது இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த பிளாஸ்டிக் கழிவுகளில் 75 சதவீதம் ஆகும்.

பருவநிலை மாற்றத்தைத் தடுப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான தெளிவான தொலைநோக்கு கொள்கையுடன் இந்தியா முன்னேறி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் பசுமை எரிசக்தி உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.

குறிப்பாக சூரிய மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எல்.இ.டி பல்புகளை பயன்படுத்த ஊக்கம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மக்களின் பணம் சேமிக்கப்படுகிறது. அதோடுநாட்டின் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற ஊக்கம் அளிக்கப்படுகிறது.

இதன்மூலம் ரசாயன உரங்கள் தவிர்க்கப்பட்டு மண் வளமும் தண்ணீர் வளமும் மேம்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் வேளாண் நிலங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்களின் பரப்பளவு 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.

நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பசுமை எதிர்காலம், பசுமை பொருளாதாரம் ஆகிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை இன்று தொடங்கி உள்ளோம். நாடு முழுவதும் அமைந்துள்ள உயிரியல் பூங்காக்களை பாதுகாக்க 'அம்ரித் தரோஹர் யோஜ்னா' திட்டமும் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. அலையாத்தி காடுகளைப் பாதுகாக்க ‘மிஷ்டி யோஜ்னா' திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. அதே நேரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்திருக்கிறது. வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோலில் 20% எத்தனாலை கலக்கும் திட்டம்வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் இயற்கையோடு இணைந்து வாழ்வது இந்தியாவில் மிகப்பெரிய இயக்கமாக உருவெடுத்து வருகிறது.

இதை முன்னிறுத்தி கடந்த ஆண்டு குஜராத்தின் கேவாடியா, ஏக்தா நகரில் ‘மிஷன் லைப்' இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் ஒரு மாதத்தில் மட்டும் 2 கோடி மக்கள் இணைந்தனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது, மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகிய கொள்கைகளை லட்சக்கணக்கான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வாழ்க்கைமுறைக்கு நாம் மாறினால் நாடு மாறும், ஒட்டுமொத்த உலகமும் மாறும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x