Published : 06 Jun 2023 05:22 AM
Last Updated : 06 Jun 2023 05:22 AM

எல்லையில் ராணுவ கட்டமைப்புகளை அதிகரிக்கும் சீனா - சர்வதேச அமைப்பு எச்சரிக்கை

சீனாவின் அக்சாய் சின் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஹெலிகாப்டர் தளம்.

புதுடெல்லி: லடாக் எல்லைப் பகுதிகளில் சீன அரசு புதிதாக ராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்று சர்வதேச அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

லடாக் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு இன்றளவும் லடாக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

லடாக் எல்லையை ஒட்டிய சீனப் பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு பதிலடியாக லடாக் எல்லையில் புதிய விமான தளம், புதிய சாலைகள், பாலங்களை மத்திய அரசு அமைத்து வருகிறது.

இந்த சூழலில் இங்கிலாந்தை சேர்ந்த ‘சாடம் ஹவுஸ்' என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லடாக்கை ஒட்டியுள்ள அக்சாய் சின் பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது லடாக்கின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியா உரிமை கோருகிறது. லடாக் மற்றும் அக்சாய் சின் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் அங்கு இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இந்த சூழலில் அக்சாய் சின் மற்றும் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியை இணைக்கும் வகையில் ஜி695 என்ற பெயரில் சீன அரசு நெடுஞ்சாலையை அமைத்து வருகிறது. இந்த சாலை பான்காங் ஏரி வரை நீளும். இதன்மூலம் சீன ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களை எளிதாக கொண்டு செல்ல முடியும்.

கடந்த 6 மாதங்களில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்தபோது அக்சாய் சின் பகுதியில் சீன ராணுவம் சார்பில் புதிதாக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது உறுதியாகிறது. புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அக்சாய் சின் பகுதியில் உள்ள ஏரியில் புதிதாக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களை நிறுத்தி வைக்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

ராகி நல்லா நதியின் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் சார்பில் எல்லைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அந்தப் பகுதியில் இந்திய ராணுவத்தின் ரோந்துப் பணியை தடுக்க முடியும். பான் காங் ஏரிப் பகுதியில் சீன ராணுவத்தின் பாலம் கட்டும் பணி நிறைவடைய உள்ளது. அந்த பாலம் முழுமை பெற்றால் அப்பகுதியில் சீன ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் அக்சாய் சின் பகுதியில் சீன ராணுவ கட்டமைப்புகள் அதிகரிக்கப்பட்டு வருவது தெளிவாகிறது. இந்தியாவுடன் மீண்டும் ஒரு மோதலுக்கு சீனா தயாராகிவருகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x