Published : 11 Oct 2017 10:34 AM
Last Updated : 11 Oct 2017 10:34 AM

லட்டு பிரசாதம் கூடுதலாக தயாரிக்க நடவடிக்கை: திருமலை தேவஸ்தானம் தகவல்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தடையின்றி லட்டு பிரசாதம் பெறுவதற்காக, தற்போது லட்டு தயாரிக்கும் இடத்தை விரிவுபடுத்த தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தலைமையில் அனைத்து தேவஸ்தான உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு பேசியதாவது:

நாடு முழுவதிலுமிருந்து ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதில் சாமானிய பக்தர்களுக்கு முழுமையான சேவையை வழங்க சில மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது. லட்டு பிரசாதம் தயாரிக்கும் இடமான ‘போட்டு’ வை அகலப்படுத்த வேண்டும். இதன் மூலம் கூடுதல் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு தடையின்றி விநியோகம் செய்யலாம். இதற்காக ஆகம நிபுணர்களிடமிருந்து ஆலோசனை பெற வேண்டும். வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸின் வெளியே நிற்கும் பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானம் பாழாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இதேபோல, அங்குள்ள இலவச தொலைபேசி பழுதாகாமல் பராமரிப்பதும் அதிகாரிகளின் கடமையாகும்.

புரட்டாசி 3-வது சனிக்கிழமை வருவதையொட்டி, வரும் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அனைத்து தேவஸ்தான அதிகாரிகளும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் தங்கும் அறைகள், லட்டு பிரசாதம் போன்றவை தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x