Published : 12 Jul 2014 10:00 AM
Last Updated : 12 Jul 2014 10:00 AM

திருப்பதி மலை வழிப் பாதையில் கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது

திருப்பதி மலை வழிப்பாதையில் பக்தர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களாக, திருப்பதி மலை வழிப்பாதை வழியாக திருமலைக்கு செல்லும் பக்தர்கள், மர்ம ஆசாமிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். வழியில், தேவஸ்தான கண்காணிப்பு ஊழியர்கள், ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது பக்தர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த மாதம் இதேபோன்று நடைபயணமாக சென்ற தம்பதி மீது மர்ம ஆசாமி ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தி கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் பக்தர்களுக் கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை இந்த நபரை கைது செய்யவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் இதேபோன்ற சம்பவம் அலிபிரி மலைவழிப்பாதையில் நடந்துள்ளது.

கால்நடைப்பாதையில் உள்ள நாராயணகிரி பகுதியில், வெள்ளிக்கிழமை காலை திடீரென மர்ம ஆசாமி ஒருவர் கத்தியைக் காட்டி பக்தர்களை மிரட்டி உள்ளார்.

இதனால், பயந்து போன பக்தர்கள் பதறி ஓடினர். இவர்களை மர்ம ஆசாமி விரட்டி உள்ளார். உடனடியாக சிலர் தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கண்காணிப்பு அதிகாரிகள், போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த மர்ம ஆசாமியை பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் இப்ரஹிம் கலீல் என்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.

பின்னர் போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x