Published : 03 Jun 2023 03:28 PM
Last Updated : 03 Jun 2023 03:28 PM

“ரயில்வே என் குழந்தை போன்றது; ஆலோசனை வழங்கத் தயார்” - ஒடிசா ரயில் விபத்து பகுதியில் மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

புவனேஸ்வர்: "ரயில்வே என் குழந்தையைப் போன்றது. ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்த நான், எனது ஆலோசனைகள் வழங்கத் தயாராக இருக்கிறேன்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரயில் விபத்து நடந்த பகுதிக்கு சனிக்கிழமை நேரில் சென்று விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளைப் பார்வையிட்டார். மேலும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "நான் ரயில்வே அமைச்சர் மற்றும் பாஜக எம்பிகளுடன் இங்கு நிற்கிறேன். உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட இருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மாநில அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும். அதேபோல் பணிகள் முடியும் வரை ரயில்வேக்கும் ஒடிசா மாநில அரசுக்கும் எங்கள் அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். நாங்கள் நேற்று 40 ஆம்புலன்ஸ்களை அனுப்பினோம். இன்று 70 ஆம்புலன்ஸ்களையும் 40 மருத்துவர்களையும் அனுப்பி உள்ளோம்.

இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து அறிய தெளிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தீவிரமாக காயமடைந்தவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியவில்லையென்றால், அவர்களை மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கத் தயாராக இருக்கிறேன்.

எனது குழந்தை: தற்போதெல்லாம் ரயில்வே ப்டஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. ரயில்வே துறை என்னுடைய குழந்தை போன்றது. ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில் நான் என்னுடைய ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை மம்தா பானர்ஜி வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில்,"மேற்கு வங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச்சென்ற ஷாலிமர் - கேரமண்டல் விரைவு வண்டி பாலசோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதை அறிந்து மிகவும் வருந்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக எங்கள் அரசு ஒடிசா மற்றும் தென்கிழக்கு ரயில்வேயுடன் இணைந்து செயல்படும். அனைத்து மீட்பு, உதவி பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் ஒடிசா அரசு மற்றும் ரயில்வே துறைக்கு உதவுவதற்காக நாங்கள் 5-6 உறுப்பினர்கள் கொண்ட குழுக்களை அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்திருந்தார்.

முன்னாள் ரயில்வே அமைச்சர் மம்தா: கடந்த 1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை 2000-ம் ஆண்டு தாக்கல் செய்தார். அதேபோல், 2009-ம் ஆண்டு அமைந்த இரண்டாவது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2013-ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்பதற்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x