புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்துள்ளனர்.
பதேர்வா - சம்பா பகுதிகளுக்கு இடையே உள்ள சாலையில் 9 ஆயிரம் அடி உயரமுள்ள கன்னி டாப் என்ற இடத்தில் இன்று இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது. உயரமான இடத்தில் உள்ள ராணுவ முகாம் நோக்கி, குண்டு துளைக்காத ராணுவ வாகனத்தில் வீரர்கள் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதையடுத்து, ராணுவம் மற்றும் காவல் துறை இணைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கின. சம்பவ இடத்திலேயே 4 வீரர்கள் உயிரிழந்த நிலையில், 17 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தெரிவித்த கூடுதல் துணை ஆணையர் சுமித் குமார் பூட்டியால், ‘‘ராணுவ வாகனம் விபத்துக்குள்ளான துயர சம்பவத்தில் 10 வீரர்களை இழந்துள்ளோம். மேலும், 11 பேர் காயமடைந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘டோடாவில் நடந்த இந்த துயரமான சாலை விபத்தால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்குச் சாத்தியமான சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த கடினமான நேரத்தில், தேசம் ஆயுதப்படைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் துணை நிற்கிறது’’ என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.