“உலக பிரச்சினைகளுக்கு இந்திய பாரம்பரியத்தில் தீர்வு உள்ளது” - அமித் ஷா

“உலக பிரச்சினைகளுக்கு இந்திய பாரம்பரியத்தில் தீர்வு உள்ளது” - அமித் ஷா

Published on

ஹரித்வார்: இந்திய பாரம்பரியமும் கலாச்சாரமும் உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அகில உலக காயத்திரி பரிவார் அமைப்பின் நிறுவனர் ஸ்ரீராம் சர்மாவின் மனைவி பகவதி தேவி சர்மா என்ற மறைந்த ஆன்மிக தலைவரின் நூற்றாண்டு மற்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அகண்ட ஜோதியின் நூற்றாண்டு விழா, உத்தராகண்ட்டின் ஹரித்துவாரில் அகில உலக காயத்திரி பரிவார் அமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமித் ஷா, அகண்ட ஜோதி அமைந்துள்ள காயத்திரி தீர்த்தம் என்ற இடத்தில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் இணைந்து பிரார்த்தனை மேற்கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, ‘‘இந்த அகண்ட ஜோதி மாநாட்டில் இருக்கும்போது, நான் அணையாத ஆற்றலையும் நித்திய ஒளியையும் உணர்கிறேன். இங்கிருந்து நான் எவ்வளவு ஒளியையும் உணர்வையும் எடுத்துச் செல்லப் போகிறேன் என்பது என் இதயத்துக்குத் தெரியும். இது நம்பிக்கை, ஆன்மிகம், கலாச்சாரம் ஆகியவற்றின் சங்கமம். ஸ்ரீராம் ஷர்மா, இந்த மூன்றையும் புத்துயிர் பெறச் செய்தார். ஆன்மாவுக்கு ஒளியூட்டும் பணியை அவர் செய்தார்.

சனாதன தர்மம், இந்திய கலாச்சாரம், இந்திய வரலாறு ஆகியவற்றை அறிந்தவர்கள் அனைவரும், உலகின் பிரச்சினைகளுக்கான தீர்வு இந்திய பாரம்பரியத்தில்தான் உள்ளது என்பதை அங்கீகரிப்பதோடு, அதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

காயத்திரி மந்திரம், காயத்திரி சாதனா உள்ளிட்ட பல்வேறு இந்திய பாரம்பரியங்களுடன் மக்களை இணைத்த ஸ்ரீராம் சர்மாவின் பங்களிப்பு போற்றுதலுக்கு உரியது. கோடிக்கணக்கான மக்களை, காயத்திரி மந்திரம், காயத்திரி பூஜை, காயத்திரி சாதனா ஆகியவற்றுடன் அவர் இணைத்துள்ளார். தற்போது அவரது பேரனான சின்மய பாண்டியா தலைமையில், இந்த சேவை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் முன்னோக்கிச் செல்வது இந்த கோடிக்கணக்கான மக்களின் பொறுப்பாகும்’’ என தெரிவித்தார்.

அகில உலக காயத்திரி பரிவார் அமைப்பில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். உலக அளவில் ஆயிரக்கணக்கான மையங்கள் உள்ளன. ஸ்ரீராம் சர்மாவின் பேரன் சின்மய பாண்டியா, லண்டனில் மருத்துவம் படித்து முடித்து 2010ல் இந்தியா திரும்பினார். தற்போது அவர், அகில உலக காயத்திரி பரிவார் அமைப்பில் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“உலக பிரச்சினைகளுக்கு இந்திய பாரம்பரியத்தில் தீர்வு உள்ளது” - அமித் ஷா
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in