

சென்னை: தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் சார்பில் உலக ஈரநில தினம் சென்னை அடையாறு கழிமுகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசு, தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் மூலம், ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான பல்வேறு நடவடிக்கைகளை, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவற்றின் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வோர் ஆண்டும் பிப்.2-ம் தேதி உலக ஈரநிலங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஈரநிலங்கள் முக்கிய பங்கு: தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் சார்பில் உலக ஈரநிலங்கள் தின கொண்டாட்டங்கள், சென்னை அடையாறு கழிமுகத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை வனக்கோட்டம் மற்றும் எஸ்ஆர்எம் ராமாபுரம் வளாகம் ஒத்துழைப்புடன் நடைபெற்ற நிகழ்ச்சியில், அடையாறு கழிமுகப் பகுதியில் இயற்கை நடை, சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.
முக்கிய வாழிடங்கள்: இதில் வனத்துறைத் தலைவர் மற்றும் ஈரநிலங்கள் ஆணைய உறுப்பினர் செயலர் னிவாஸ் ரெட்டி பங்கேற்று பேசியதாவது: சென்னை போன்ற நகர்ப்புறங்களில், அதிக மழை பெய்யும் காலங்களில் வெள்ளநீரை உறிஞ்சி மெதுவாக வெளியேற்றுவதன் மூலம் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதில் ஈரநிலங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
மேலும், புலம்பெயரும் பறவைகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு ஈரநிலங்கள் முக்கிய வாழிடங்களாக உள்ளன. திட்டமிடப்படாத நகரமயமாக்கல், கழிவுநீர் புகுதல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறைபாடு காரணமாக ஈரநிலங்கள் சுருங்கி வருவதால் நகர்ப்புறங்களில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது.
இயற்கை நடையின்போது, அடையாறு கழிமுகத்தின் சூழலியல் முக்கியத்துவம், ஈரநில உயிரிசைவு, சூழல் சேவைகள் மற்றும் காலநிலை மாற்றத் தாங்குதலில் ஈரநிலங்களின் பங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தூய்மைப் பணியில் 86 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சென்னை வனப் பாதுகாவலர் எஸ்.என்.தேஜஸ்வி, துணை வனப் பாதுகாவலர் (ஈரநிலங்கள்) போசாலேசச்சின், சென்னை மாவட்ட வன அலுவலர் வி.ஏ.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.