ஓசூர் - ஆந்திரா வனப்பகுதியில் யானைகள் வழித்தடம் 70% ஆக்கிரமிப்பு - விளை நிலங்களை வாழ்விடமாக்கும் வலசை யானைகள்!

ஓசூர் - ஆந்திரா வனப்பகுதியில் யானைகள் வழித்தடம் 70% ஆக்கிரமிப்பு - விளை நிலங்களை வாழ்விடமாக்கும் வலசை யானைகள்!
Updated on
1 min read

ஓசூர் வனக்கோட்டம் முதல் ஆந்திரா வனப்பகுதி வரையான யானை வழித்தடம் 70 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், வலசை யானைகள் விளை நிலங்களை வாழ்விடமாக மாற்றி வருகின்றன.

கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி உயிரின சரணாலயத்தில் இருந்து ஓசூர் வனக்கோட்டத்துக்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பரில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக தளி, ஜவளகிரி வனப்பகுதியில் நுழைந்து தேன்கனிக்கோட்டை, நொகனூர், ஊடேதுர்க்கம், சானமாவு, செட்டிப்பள்ளி மற்றும் மகாராஜகடை வனப்பகுதி வழியாக ஆந்திரா மாநிலம் கவுன்டன்யா சரணாலயம் மற்றும் ஸ்ரீவெங்கடேஷ்வரா சரணாலயம் வரை சென்று மீண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வந்த பாதையில் திரும்பும்.

இந்நிலையில், யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் கடந்த சில ஆண்டுகளாக வலசை யானைகள் ஆந்திரா மாநில வனப்பகுதிக்குச் செல்லாமல் ஓசூர் வனக்கோட்ட பகுதியில் உள்ள விளை நிலங்களை வாழ்விடமாக மாற்றி வருகின்றன.

இதுதொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: குடகுமலை மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதிலிருந்து ஆண்டுதோறும் நவம்பரில் இனபெருக்கம் மற்றும் உணவுக்காக இரு குழுக்களாக யானைகள் ஓசூர் வனக்கோட்டம் வழியாக வலசை பயணத்தை தொடங்கி அவை ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, மகாராஜா கடை வழியாக ஆந்திரா மாநிலம் திருப்பதி வழியாக அசாம் மாநில வனப்பகுதி வரை நெடுந்தூர வலசை செல்லும்.

தற்போது, யானைகள் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலம் கவுன்டன்யா உயிரியல் பூங்காவில் இருந்து அசாம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பால் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் வனக்கோட்டத்தில் மட்டுமே வலசைப் பாதை இருந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் பெரும்பாலான பாதையை ஆக்கிரமிக்கப்பட்டு கிரானைட் குவாரி, பயிர் சாகுபடி, நகர்ப்புற விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வலசைப் பாதை துண்டிக்கப்பட்டதால், ஓசூர் வனக்கோட்டப் பகுதி விளை நிலங்கள் யானைகளின் வாழ்விடமாக மாறியுள்ளது.

கடந்த காலங்களில் தந்தங்களுக்காக ஆண் யானைகள் கொல்லப்பட்டதால், தற்போது, ஒரு ஆண் யானை உள்ள இடத்தில் 25 பெண் யானைகள் உள்ளதால், இனப்பெருக்கம் குறைந்து வருகிறது. எனவே, யானைகளை பாதுகாக்க அதன் வழித்தட ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “கர்நாடகா மாநிலத்தில் இருந்து பல தலைமுறையாக யானைகள் தமிழகம் வழியாக ஆந்திரா மாநிலம் வரை வலசை சென்று திரும்பும். யானைகள் கூட்டத்தை வயதான பெண் யானை வழி நடத்தி செல்லும். வலசைப் பாதைகளில் ஆக்கிரமிப்பு இல்லாத போதும் பயிர்ச் சேதம், மனித உயிரிழப்பு இல்லை.

யானைகள் வலசைப் பாதையில் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் சென்றன. தற்போது வலசைப் பாதை 70 சதவீதம் ஆக்கிரமித்துள்ளதால், விளை நிலங்களை விட்டு யானைகள் வெளியேறாமல் சுற்றித் திரிகின்றன” என்றனர்.

ஓசூர் - ஆந்திரா வனப்பகுதியில் யானைகள் வழித்தடம் 70% ஆக்கிரமிப்பு - விளை நிலங்களை வாழ்விடமாக்கும் வலசை யானைகள்!
மக்​களைத் தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in