

சென்னை: தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சூப்பர் சென்னை ஐகான்’ விருதுபெற்ற சவுமியா சுவாமிநாதன், தூய்மையான சுற்றுச்சூழலே ஆரோக்கியமான நகரத்தின் அடித்தளம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
பருவநிலை மாற்றம், ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்தும், அறிவியல் மற்றும் தலைமை பண்பில் பெண்களின் பங்களிப்பு, அடுத்த தசாப்தத்தில் மருத்துவத் துறையில் ஏற்படப்போகும் புதிய மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கும் வகையில் ‘சூப்பர் சென்னை அரட்டை’ சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி, தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சவுமியா சுவாமிநாதன், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே பேசியதாவது:
மருத்துவ சிகிச்சை மட்டும் ஒரு நோயாளியை குணப்படுத்த போதாது. வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, சமூக பாகுபாடு, வாழ்வாதார சவால்கள் போன்ற காரணிகளும் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்குடியின மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காசநோயாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் சத்தான உணவு வழங்கப்பட்டபோது, நோயிலிருந்து விரைவில் மீள்வதோடு மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களுக்கு காசநோய் பரவுவதும் 50 சதவீதம் வரை குறைந்தது. அதேபோல் உலகளாவிய கொள்கைகள் உள்ளூர் மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும், தேவைகளையும் அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.
அர்த்தமுள்ள ஆராய்ச்சி என்பது ஆய்வகத்தில் மட்டும் தொடங்குவதில்லை. அது மக்களின் வாழ்க்கையில் இருந்து தொடங்குகிறது. ஊட்டச்சத்து, காலநிலை மாற்றம், சமமான மருத்துவ சேவை என எதை எடுத்துக் கொண்டாலும் மக்களின் பங்கேற்பும், அறிவியலும் இணைந்தால் தான் நிலையான தீர்வுகளை உருவாக்க முடியும். செயற்கை நுண்ணறிவு மருத்துவத் துறையில் முக்கிய பங்கு வகித்தாலும், அது மனிதர்களை மாற்றுவதற்காக அல்ல, சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
சென்னை நகரம் எல்லையின்றி விரிவடைந்திருந்தாலும் மக்கள் நடப்பதற்கான நடைபாதைகளோ, உடற்பயிற்சி செய்வதற்கான இடங்களோ போதிய அளவில் இல்லை. பசுமை நிறைந்த பொது இடங்கள், நடைபாதைகள் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலே ஆரோக்கியமான நகரத்தின் அடித்தளமாகும். எனவே, நீர்நிலைகளின் தரத்தை கண்காணித்தல், காற்று மாசுபாட்டை அளவிடுதல், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ‘குடிமக்களுக்கான விஞ்ஞானி’களாக செயல்பட வேண்டும். அதுவே ஆரோக்கியமான, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நகரத்தை உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சவுமியா சுவாமிநாதனுக்கு, அறிவியல், பொது சுகாதாரம் மற்றும் ஆதாரப்பூர்வமான கொள்கை வகுப்பில் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி மாதத்தின் ‘சூப்பர் சென்னை ஐகான்’ விருதை, ‘சூப்பர் சென்னை’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரஞ்சித் ரத்தோட் வழங்கினார். எஸ்.ஆர்.எஸ்.வி அண்ட் அசோசியேட்ஸ் செல்ல கிருஷ்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்