

சென்னை: எண்ணூர் முதல் கோவளம் வரை கடற்கரை ஓரங்களில் சேகர மாகியுள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக்கழிவுகளை ஜூன் 14-ம் தேதிக்குள் முழுமையாக அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் குழு அமைத்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக காசிமேடு முதல் எண்ணூர் வரையிலான கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் கழிவுகள் அதிகப்படியாக தேங்கி கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த வழக்கு பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய அமர்வு, ‘‘எண்ணூர் முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகம் மட்டுமல்லாது கோவளம் வரை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை ஓரங்களில் உள்ள குப்பைக்கழிவுகளை மீன்பிடி தடைக் காலம் முடிவடையவுள்ள ஜூன் 14-ம் தேதிக்குள் முழுமையாக அகற்ற வேண்டும்’’ என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக மாநகராட்சி ஆணையர் தலைமையில் சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர், மீனவர் நலத்துறை இயக்குநர், காசிமேடு மீன்பிடி துறைமுக மேலாளர் ஆகியோர் அடங்கிய தூய்மைப் பணிக்கான கூட்டுக்குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை துறைமுக வளாகத்துக்குள்ளாகவோ, கடற்கரை ஓரங்களிலோ பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கூவம் ஆறுகளில் விடப்படும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் தெர்மோகோல் பெட்டிகளை முற்றிலுமாக தவிர்த்து, சூரிய சக்தியால் இயங்கும் குளிரூட்டப்பட்ட அறைகளை அமைக்க வேண்டும் எனவும் பசுமை தீர்ப்பாயம் யோசனை தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவுக்கு உத்தரவிட்டுள்ள பசுமை தீர்ப்பாய அமர்வு, வழக்கு விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.