

கோப்புப் படம்
சென்னை: மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்காக நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில், முறையான முழுப் பட்டியலை வழங்காமல் பிரதமர் மோடியின் விருப்பத்திற்காக ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல். எதிர்க்கட்சிகளை ஒடுக்கவே சிபிஐ-யை மத்திய அரசு கைப் பாவையாகப் பயன்படுத்தி வருகிறது.
மேலும், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக 22 லட்சம் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்துவதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. மத்திய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து 15-ம் தேதி (இன்று) அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடைபெறும். சென்னையில் காலை 10.00 மணியளவில் தண்டையார்பேட்டை அஞ்சல் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.