

கூடலூர்: கூடலூர் அருகே ஓவேலியில் இருவரை கொன்ற புலி இன்று வனத்துறையின் கூண்டில் சிக்கியது. மேலும், பிடிப்பட்ட புலி, இருவரை கொன்ற புலிதான் என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம், ஓவேலி வனச்சரகத்தில் மனிதர்- வனவிலங்கு மோதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் புலியை பிடிக்கும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வந்தது.
இந்நிலையில், கடந்த செப்.9-ம் தேதி பாரம் அருகேயுள்ள அண்ணாநகர் பகுதியில் புலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியது. கூண்டில் சிக்கியிருந்த சிறுத்தையின் உறுமல் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள், புலி சிக்கியிருப்பதாக நினைத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர், கூண்டில் புலி அல்ல, சிறுத்தை சிக்கியிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
ஏமாற்றமடைந்த வனத்துறையினர் 28 நாட்களாக தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, கார்குடி மற்றும் சிங்காரா வனச்சரகங்கள் உட்பட பொருத்தப்பட்டுள்ள 244 தானியங்கி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், ஹலாலா எஸ்டேட் பகுதியில் கூடுதலாக 3 ஜிஎஸ்எம் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
புலியை பிடிப்பதற்காக ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள 13 பொறி கூண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. புலியின் நடமாட்டம் முதுமலை பகுதியில் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மாவட்ட வன அலுவலர் தேவராஜ் தலைமையில், கூடலூர் எல்லைப் பகுதியான ஹலாலா எஸ்டேட்டில் மேலும் ஒரு கூண்டு அமைக்கப்பட்டது.
அதேபோல், அல்லூர்வயல், சில்வர் கிளவுட், ஹலாலா எஸ்டேட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆற்றோரப் பகுதிகள், நார்தன் ஹே, சஜ்ஜிவன் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் குழுக்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மேல் கூடலூர் பகுதியில் சில்வர் கிளவுட் பகுதியில் வனச் சோதனை சாவடி அருகே, தனியார் எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் புலி சிக்கியது. இதைக் கண்ட மக்கள் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், புலியை மற்றொரு கூண்டுக்கு மாற்றி முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு எடுத்துச் சென்றனர்.
இது குறித்து வன அலுவலர் தேவராஜ் கூறும்போது, “கூண்டில் சிக்கிய புலி, மருத்துவ பரிசோதனைக்காக முதுமலை எடுத்து செல்லப்படுகிறது. உயரதிகாரிகள் உத்தரவுபடி அடுத்து கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்நிலையில், பிடிக்கப்பட்ட புலி, ஆட்கொல்லி புலி தானா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது. இது குறித்து ஆய்வு செய்த வனத்துறையினர், ‘பிடிப்பட்ட 9-வது ஆண் புலி, இருவரை கொன்ற புலி தான்’ என்று உறுதி செய்துள்ளனர்.
இதனிடையே, “பிடிபட்ட புலி மருத்துவ சிகிச்சைக்கு பின்னர், வண்டலூர் உயிரியல் பூங்கா அல்லது கர்நாடக மாநிலம் வன விலங்குகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு செல்லப்படும்” என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.