

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள யானைகள், உணவு மற்றும் தண்ணீருக்காக வனம் சூழ்ந்த மலையடிவார சாலைகளில் உலா வருவது அதிகரித்துள்ளது.
நேற்று மதியம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியில் இருந்து பில்லூர் அணை செல்லும் சாலையில் யானை கூட்டம் ஒன்று சாலையை கடந்து வனத்துக்குள் செல்ல முயன்றது.
அதே நேரத்தில் கார் ஒன்றும் அவ்வழியே வர, யானைக் கூட்டத்தில் இருந்த பெரிய பெண் யானை சாலையை கடக்கும் குட்டி யானை உள்ளிட்ட தனது கூட்டத்தை பாதுகாக்கும் வகையில், கார் மேற்கொண்டு வர இயலாத வகையில் சாலையை மறித்தபடி நின்றது. இதையடுத்து, காரில் வந்தவர்கள் நிறுத்தி பொறுமை காத்தனர்.
யானை கூட்டம் பத்திரமாக சாலையை கடந்து வனத்துக்குள் சென்றபிறகே, தாய் யானை சாலையை விட்டு நகர்ந்து காட்டுக்குள் சென்றது. இதனை காரினுள் இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வெள்ளியங்காடு- பில்லூர் அணை செல்லும் பகுதியில் தனது கூட்டத்தை சாலையில் நின்று பாதுகாத்த தாய் யானை.