கரும்பு லாரியை சுற்றி வளைத்த யானைகள் - ஆசனூரில் பதிவான காட்சி

கரும்பு லாரியை சுற்றி வளைத்த யானைகள் - ஆசனூரில் பதிவான காட்சி
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதி வழியாக கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை யானைகள் சுற்றி வளைத்து, கரும்புகளை ருசித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் – கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய சாலையான ஆசனூர் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கர்நாடகத்தில் கரும்பு அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அங்கிருந்து சத்தியமங்கலத்தில் உள்ள ஆலைகளுக்கு லாரிகளில் கரும்பு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியை யானைகள் வழிமறித்து சுற்றி வளைத்தன. இதனால் அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர் செய்வதறியாமல் நின்றார்.

சில நிமிடங்கள் லாரியில் இருந்த கரும்புகளை யானைகள் ருசித்த பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பிறகே ஓட்டுநர் லாரியை அங்கிருந்து இயக்கிச் சென்றார். இக்காட்சியை சக வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

வனத்துறையினர் எச்சரிக்கை

கரும்பு லாரிகளை யானைகள் வழிமறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். யானைகள் சாலையில் தென்பட்டால் மற்ற வாகன ஓட்டிகள் தொலைவில் வாகனங்களை நிறுத்தி, அவை வனத்துக்குள் சென்ற பிறகே பயணத்தை தொடர வேண்டும். மேலும், சாலையில் நடமாடும் வனவிலங்குகளுக்கு யாரும் உணவளிக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கரும்பு லாரியை சுற்றி வளைத்த யானைகள் - ஆசனூரில் பதிவான காட்சி
வேகமெடுக்கும் எச்1என்1 இன்ஃப்ளூயன்சா பாதிப்பு: பொதுமக்களுக்கு இந்திய மருத்துவக் கழகம் முக்கிய அறிவுரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in