

ராமேசுவரம் கெந்தமாதன பர்வதம் பகுதியில் இரை தேடும் ஊசிவால் வாத்துகள்.
ராமேசுவரம்: அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல்லாயிரம் மைல்கள் கடந்து ராமேசுவரத்துக்கு ஊசிவால் வாத்துகள் வலசை வரத் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கடலூர், தனுஷ்கோடி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஊசிவால் வாத்துகள் ஆண்டுதோறும் வலசை வருவது வழக்கம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், மேலச்செல்வனூர் கீழச்செல்வனூர், சக்கரக்கோட்டை, தேற்றங்கால் பகுதிகளில் பறவைகளின் சரணாலயங்கள் உள்ளன.
இங்கு ஆண்டுதோறும் டிசம்பரில் தொடங்கி ஏப்ரல் வரை ஊசிவால் வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளான், அரிவாள் மூக்கன், நாரை, பாம்பு தாரா, நீர் காகங்கள், பிளமிங்கோ என 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகின்றன.
பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கி, டிசம்பர் இறுதி வரை ராமேசுவரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் போன்ற கடலோரப் பகுதிகளில் பரவலாகப் பெய்தது. இதனால், குளங்கள், நீரோடைகள் நிரம்பின.
இந்நிலையில், ராமேசுவரம் கடற்பகுதிகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து பல்லாயிரம் மைல் பறந்து ஊசிவால் வாத்து பறவைகள் தற்போது வலசை வரத் தொடங்கி உள்ளன.
ஊசிவால் வாத்துகளின் வால் நீண்டு ஊசி போல இருப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது. அலகு நீலச் சாம்பல் நிறத்தில் இருக்கும். கால்களும் சாம்பல் நிறத்தில் இருக்கும். சாக்லேட் நிறத்தில் இதன் தலை இருக்கும். சிறகை விரித்தால் 95 செ.மீ. வரை இருக்கும்.
எடை 1135 கிராம். நன்றாக நீச்சல் அடிக்கும். ராமேசுவரம் கடற்கரைப் பகுதிகளில் சுற்றித் திரியும் ஊசிவால் வாத்துகளை சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஆர்வமாகப் பார்த்து ரசிக்கின்றனர்.