செப்டம்பரில் கடைப்பிடிக்கப்படும் பட்டாம்பூச்சி மாதம்: பல்லுயிர் பெருக்கத்துக்கு முக்கிய காரணியாக திகழும் பட்டாம்பூச்சிகள்

செப்டம்பரில் கடைப்பிடிக்கப்படும் பட்டாம்பூச்சி மாதம்: பல்லுயிர் பெருக்கத்துக்கு முக்கிய காரணியாக திகழும் பட்டாம்பூச்சிகள்
Updated on
1 min read

மதுரை: செப்டம்பர் மாதம் ‘பெரிய பட்டாம்பூச்சி மாதமாக’ தேசிய அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பட்டாம்பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவற்றின் பன்முகத் தன்மையை ஆவணப்படுத்துதல், அவற்றின் ஊட்டத் தாவரங்கள் மற்றும் வாழ்க்கை சுழற்சிகளை அடையாளம் காணுதல், மேலும் சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் பட்டாம் பூச்சிகளின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தவும், கல்லூரி வளாகங்களில் அவற்றைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

இது குறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கூறியதாவது: 2017-ம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்ட பட்டாம்பூச்சி மாதம் நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது. இந்த மாதத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், இயற்கை ஆர்வலர்கள் பட்டாம்பூச்சிகளை பார்வையிட்டு, புகைப்படம் எடுத்து, பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். நிகழாண்டில் ‘நடை – கவனி – பதிவு – பாதுகாப்பு’ என்ற கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத் தப்படுகிறது.

இம்மாதம் இந்தியாவின் பல பகுதிகளில் பட்டாம்பூச்சிகளை காண மிகவும் ஏற்ற காலமாகும். பருவமழைக்குப் பிந்தைய தாவரவளர்ச்சி, பூக்கள் மற்றும் சீரான வானிலை ஆகியவை பட்டாம்பூச்சிகளின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகின்றன. 

பட்டாம்பூச்சிகள் வெறும் அழகான உயிரினங்கள் மட்டுமல்ல. அவை சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் முக்கியக் குறியீடுகள். பட்டாம்பூச்சிகள் பல்லுயிர் பெருக்கத்துக்கு முக்கிய காரணியாக விளங்குகின்றன.

நமது நாட்டில் 1,300-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. இது உலகின் மொத்த வண்ணத்துப்பூச்சி இனங்களில் 10 சதவீதமாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடகிழக்குப் பகுதி, கிழக்கு இமயமலைப் பகுதிகள் ஆகியவை பட்டாம்பூச்சி இனங்களை காண்பதற்கான முக்கிய இடங்களாகும்.

நாட்டில் 700-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள், அருணாசலபிரதேசம், சிக்கிம், மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் உள்ளன. தமிழகத்தில் 329 பட்டாம்பூச்சி சிற்றினங்கள் காணப்படுகின்றன.

பல்லுயிர் பாதுகாப்புக்கு உதவும் வகையில் பட்டாம் பூச்சிகளைப் பார்ப்போம் – பதிவு செய்வோம் – அவற்றின் வாழிடங்களை பாதுகாப்போம். விலங்கியல், தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல், புவியியல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிர் அறிவியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த முயற்சியில் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

செப்டம்பரில் கடைப்பிடிக்கப்படும் பட்டாம்பூச்சி மாதம்: பல்லுயிர் பெருக்கத்துக்கு முக்கிய காரணியாக திகழும் பட்டாம்பூச்சிகள்
காற்று தூய்மை தரவரிசை பட்டியலில் மதுரைக்கு 39-வது இடம்: பின்னடைவு ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in