காற்று தூய்மை தரவரிசை பட்டியலில் மதுரைக்கு 39-வது இடம்: பின்னடைவு ஏன்?

காற்று தூய்மை தரவரிசை பட்டியலில் மதுரைக்கு 39-வது இடம்: பின்னடைவு ஏன்?
Updated on
1 min read

மதுரை: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் `தூய்மையான காற்று ஆய்வு 2026' (‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன்) தரவரிசைப் பட்டியலில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 48 பெரிய நகரங்களின் பட்டியலில் மதுரை 39-வது இடத்தை பிடித்துள்ளது. 

ஆண்டுதோறும் காற்று மாசு அடைவதால் உலகளவில் 70 லட்சம் பேரும், இந்தியாவில் 17 லட்சம் பேரும் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மக்கள்தொகை அடிப்படையில் நாடுமுழுவதும் முக்கிய மாநகரங்களுக்கும், சிறிய நகரங்களுக்கும் `தூய்மையான காற்று ஆய்வு 2026' திட்டத்தில் மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குகிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை காற்று மாசைக்கட்டுப்படுத்த மத்திய அரசு ரூ.16,423.55 கோடி ஒதுக்கி உள்ளது.

மதுரை மாநகராட்சியில் கடந்த 2022 முதல் இந்த திட்டத்தின்கீழ் காற்று மாசைத் தடுப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் `தூய்மையான காற்று ஆய்வு 2026' தரவரிசைப் பட்டியலில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 48 பெரிய நகரங்களின் பட்டியலில் மதுரை மாநகரம் 39-வது இடத்தை பிடித்துள்ளது.

தேசிய அளவிலான தரவரிசையில் 200-க்கு 183 மதிப்பெண்களுடன் திருச்சி 12-வது இடத்திலும், சென்னை 147.7 மதிப்பெண் பெற்று 35-வது இடத்திலும் உள்ளன.

இந்திய அளவில் 198 மதிப்பெண்கள் பெற்று லக்னோ முதலிடத்தையும், இந்தூர் 197 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும் ஜபல்பூர் 195 மதிப் பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை மாநகரில் `தூய்மையான காற்று ஆய்வு 2026'  திட்டத்தில் கடந்த 2020-21 நிதி ஆண்டு முதல் மட்டுமே நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது.

ஆனால் சென்னை, திருச்சி உள்ளிட்ட மற்ற மாநகரங்கள் 2019-20 நிதி ஆண்டு முதலே நிதியைப் பெற்றுள்ளதால் அந்த நகரங்கள் `தூய்மை யான காற்று ஆய்வு 2026' திட்டத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவுபெற்றுள்ளன. அந்த நகரங்களுக்குப் பிறகு மதுரைக்கு நிதி ஒதுக்கீடு வரப்பெற்றதால், இந்த திட்டத்துக்கான பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.

மேலும், 2024-2025-ல் காற்று மாசைக் குறைக்கும் இலக்கை எட்டாததால் மதுரைக்கு என்சிஏபி நிதி போதுமான அளவு கிடைக்கவில்லை.

பின்னர் கடந்த 2025-2026 ஆண்டு காலகட்டத்தில் காற்று மாசு குறைந்ததைத் தொடர்ந்து மதுரைக்கு மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டது.

இதுபோன்ற காரணங்களால் மதுரை இந்தப் பட்டியலில் பின்தங்கியது. ஆனால், கடந்த காலத்தை ஒப்பிடும்போது காற்று மாசைக் கட்டுப்படுத்துவதில், மாநகரச் சாலைகளைத் தூய்மையாகப் பராமரிப்பதில் மதுரை மாநகராட்சி முன்னேற்றம் கண்டுள்ளது. மாநகர தூய்மைக்கும், இந்த ரேங்க் பட்டியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, என்று கூறினார்.

காற்று தூய்மை தரவரிசை பட்டியலில் மதுரைக்கு 39-வது இடம்: பின்னடைவு ஏன்?
‘போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம்...’ - ஸ்டாலின் எதிர்வினை மீது தவெக விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in