Last Updated : 30 Mar, 2023 06:55 AM

 

Published : 30 Mar 2023 06:55 AM
Last Updated : 30 Mar 2023 06:55 AM

கடலூர் | 5 தலைமுறையாக பாதுகாக்கப்படும் கோட்டிமுளை கத்திரி

காய்த்து தொங்கும் கோட்டிமுளை கத்திரிக்காய். (அடுத்த படம்) கோட்டிமுளை கத்திரிக்காய்கள்.

கடலூர்: ‘கடலூர் கோட்டிமுளை கத்திரி,உள்ளிட்ட 10 விளைப் பொருட்களுக்கு இந்தாண்டில் புவிசார் குறியீடு பெற திட்டமிடப்பட்டுள்ளது’ என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கடலூர் மாவட்டத்தில் இந்த சிறப்பு ரக கத்திரிகளை பயிர் செய்து வரும், கோட்டுமுளை கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது கோட்டுமுளை கிராமம். இக்கிராம மக்கள் பெரும்பாலானோர் விவசாயிகள். இக்கிராமத்தினர் தலைமுறை தலைமுறையாக காய்கறி பயிர்களையே பயிரிட்டு வருகின்றனர். அவற்றில் முக்கியமானது கத்திரிக்காய். இப்பகுதியில் விளையும் கத்திரிக்காய் நல்ல பளபளப்பாக கண்களை கவரும் வகையில் இருக்கும். இதனால் இங்கு விளையும் கத்திரிக்காய்கள் ‘கோட்டிமுளை கத்திரி’ என அழைக்கப்படுகின்றன.

கோட்டுமுளை கிராமத்தினர் 5 தலைமுறைகளாக குறிப்பிட்ட ஒரு பாரம்பரிய கத்திரி ரகத்தை பயிரிட்டுள்ளனர். தொடர்ந்து அதில் இருந்து விதை எடுத்து பாதுகாப்பாக வைத்து, ஒவ்வொரு ஆண்டும் பயிரிட்டு வந்துள்ளனர். அந்தப் பகுதி மண்ணின் தன்மையால் ஒவ்வொரு வருடமும் விதை மாற்றமடைந்து, இந்த சுவை மிகுந்த கோட்டிமுளை கத்திரி கிடைத்துள்ளதாக விதை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கோட்டுமுளை கிராமத்தினர் மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள பெருந்துறை, ஓட்டிமேடு, சிறுவரப்பூர் உள்ளிட்ட கிராமங்களிலும் இந்த ரக கத்திரிக்காய் தற்போது பயிரிடப்பட்டு வருகிறது. மொத்தமாக இப்பகுதியில் சுமார் 70 ஹெக்டருக்கு மேல் இந்த கத்திரிசாகுபடி நடக்கிறது. கோட்டுமுளையில் பயிரிடப்படும் இந்த கத்திரிகளை உஜாலா, பவானி, பரோல் (பச்சை) கத்தரி என உட்பிரிவு ரகவாரியாக பிரித்து விவசாயிகள் அழைக்கின்றனர்.

தொடக்கத்தில், இந்தக் கிராமத்தில் விளைகின்ற கத்திரிக்காய் நெய்வேலி, வடலூர், சேத்தியாதோப்பைச் சுற்றியுள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கும்பகோணம், திருச்சி, சென்னை என தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு சென்று தனித்தன்மையுடன் திகழ்கிறது.

பெரிய, பெரிய நகரங்களில் இருந்து வியாபாரிகள் கோட்டுமுளை கிராமத்துக்கே சென்று கத்திரிக்காய்களை மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். ஆள்பற்றாக்குறையை சமாளித்துதான் இப்பகுதி விவசாயிகள் இந்தக் கத்திரியை பயிரிட்டு வருகின்றனர்.

கோட்டுமுளை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில் முருகன் கூறுகையில், “எங்கள் ஊர் கத்திரிக்காய் புவிசார் குறியீட்டுக்கு பரிந்துரைக்கப்படுவது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எங்கள் முன்னோர் இதன் விதையைக் காப்பாற்றி, தொடந்து பயிர் செய்து எங்களிடம் அளித்தனர். எங்கள் மண்ணின் வளத்தால், மருத்துவக்குணம் கொண்ட இந்த கத்திரிக்காய் தொடர்ந்து எங்களுக்கு கிடைத்து வருகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x