Published : 05 Dec 2022 04:07 AM
Last Updated : 05 Dec 2022 04:07 AM

‘மண்: உணவு தொடங்கும் இடம்’ - ஆயிரம் ஆண்டு காத்திருப்பில் உருவாகும் 3 செமீ. மண் வளம் | இன்று உலக மண் வள நாள்

பிரதிநிதித்துவப் படம்

குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ, அதுபோன்றே, மண்ணுக்கு மழைத் துளியும், மாசற்ற இடுபொருட்களின் பயன்பாடும் முக்கியம். நெகிழி என்ற எமனோடு மண் வளம் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், நம் பங்குக்கு வேதியியல் கழிவுகளை கொட்டி, கொஞ்சம் கொஞ்சமாய் மண்ணின் தன்மையை கொலை செய்து கொண்டிருக்கிறோம். சர்வதேச அளவில் உலக மண் வள நாள் கடைபிடிக்கப்படுகிறது என்றால் அழிவின் விளிம்பில் மண் வளம் உள்ளதாகவே பொருள். கற்றறிந்த பெருமக்களை கொண்ட உலகத்தில், கல்லையும், மண்ணையும் காப்பதே அரும்பாடாய் இருப்பது மிக வேதனை.

மண் வளத்தின் மேன்மை குறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ப.தங்கவேல் கூறியது: மண் வளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண் வள நாள் கடை பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்திட, 68-வது ஐ.நா.சபையின் ஒப்புதலோடு கடந்த 2014-ம் ஆண்டு முதல் உலக மண் வள தினம் கடைபிடிக்கப்படுகிறது.

95 சதவீதத்துக்கும் அதிகமான உணவுகள் மண்ணிலிருந்து பெறுகின்ற நிலையிலும், உலகளவில் 33 சதவீதம் மண் வளம் சிதைந்துள்ளதை கருத்தில் கெள்ளவேண்டும். மண்ணின் அங்ககக் கரிமக் குறைபாடு மற்றும் பல்லுயிரிழப்பு, ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வு, மண் அரிப்பு, மாசுபாடு, உவர்ப்புத்தன்மை மற்றும் அதிகப்படியான உரப்பயன்பாடு போன்ற காரணிகளால் மண் வளம் சீர்கெட்டு வருகிறது.

நம் கண் முன்னே நிறைந்திருக்கும் மண்ணை நாம் பொருட்டாக கொள்வதில்லை. அவ்வாறான வெறும் மண்ணானது 2 முதல் 3 செமீ., உருவாக 1,000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதே சமயம், ஒவ்வொரு ஆண்டும் 24 பில்லியன் டன் வளமான மண்ணானது மண் அரிப்பு காரணமாக இழக்கப்படுகிறது. இவ்வாறு மண் வளம் குறைவதால் பயிர் விளைச்சல் குறைந்து உணவு உற்பத்தியில் இலக்கினை அடைவது பெரும் சவாலாகிவிட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு உலகளாவிய வேளாண் பயன்பாட்டுக்காக 266 மில்லியன் டன் செயற்கை மற்றும் ரசாயன உரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே காலத்தில் இயற்கை உரப் பயன்பாடு ஏறத்தாழ 10 மடங்கு குறைவாக 28 மில்லியன் டன் என்றளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றில், சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமான ரசாயன உரப் பயன்பாட்டினைக் கொண்டுள்ளன. கடந்த 70 ஆண்டுகளில் உணவிலுள்ள வைட்டமின்கள் மற்றும் இதர நுண்ணூட்டச் சத்துக்களின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் உலகளவில் இரண்டு பில்லியன் மக்கள் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2050-ல் உலகளாவிய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேளாண் உற்பத்தியை 60 சதவீதம் அதிகரிக்கும் நிலையில் உலக நாடுகள் உள்ளன. இந்நிலையில், நிலையான மண் மேலாண்மையின் மூலம் 58 சதவீதம் அதிக உணவு உற்பத்தி செய்ய முடியும்.

உலக மண் வளக்கூட்டாண்மையானது மண் வளத்தை நிலையான முறையில் நிர்வகித்தல் மற்றும் மீட்டெடுத்தலை முன்னெடுத்துள்ளது. மண் நிர்வாகத்தினை வலுப்படுத்துதல், மண் பற்றிய அறிவையும், எழுத்தறிவையும் ஊக்குவித்தல், மண் வளம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவித்தல், மண் வளத்தை மதிப்பிடவும், வரைபடம் மூலம் கண்காணிக்கவும் இணக்கமான வழிமுறைகளைக் கண்டறிதல், தொழில்நுட்ப ஒத்துழைப்பை வளர்ப்பது என 10 காரணிகளை கையாளுவதன் மூலம் வரும் 2030-ம் ஆண்டுக்குள், உலகில் குறைந்த பட்சம் 50 சதவீதம் அளவில் மண் வளத்தை மேம்படுத்திப் பராமரித்தல் என்ற இலக்கை அடிப்படையாக கொண்டு செயலாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

வளமான மண்ணானது ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுக்கு அடிப்படையாகும். மண் வளம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மண் வளத்தை மேம்படுத்தும் சமூகத்தினை ஊக்குவிக்கும் வகையிலும் 2022-ம் ஆண்டு மண் வள நாளானது ‘மண்: உணவு தொடங்கும் இடம்’ என்ற கருப்பொருளில் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

இந்நன்னாளில் நிலையான மண் மேலாண்மை வழிமுறைகளைப் பின்பற்றி மண் வளத்தையும், பயிர் விளைச்சலையும் மேம்படுத்தி உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்வோம். ‘மண் வாழ ; மனித குலம் வாழும்’ என்றுணர்ந்து, நம்மால் மண் வளத்துக்கு எந்த வகையிலும் தீங்கிழைக்காமல் செயல்படுவோம் என, உலக மண் வள நாளான இன்று, உறுதி பூணுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x