Published : 29 Oct 2022 06:34 PM
Last Updated : 29 Oct 2022 06:34 PM

சென்னை மக்கள் வெடித்த பட்டாசுகளின் கழிவுகள் 276 டன் - 5 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு

சாலையில் ஓரத்தில் பட்டாசுக் கழிவுகள் | கோப்புப் படம்

சென்னை: சென்னையில் தீபாவளியையொட்டி 276 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது 3 மடங்கு உயர்வு ஆகும்.

சென்னையில் தீபாவளி பண்டிகையின்போது, சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் அபாயகரமான கழிவுகள் என்பதால், மாநகராட்சியின் சார்பில் இக்கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரித்து முறையாக பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல ஒவ்வொரு மண்டலத்திற்கும் இரண்டு கனரக வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த வாகனங்கள் மூலம் 23, 24, மற்றும் 25 ஆகிய மூன்று நாட்களில் 15 மண்டலங்களிலும் 211.08 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. மேலும் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களில் 95 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. இதன்படி 5 நாட்களில் மொத்தமாக 276 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் 120 கனரக வாகனங்களின் மூலமாக கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2017ம் ஆண்டு 85 டன், 2018-ம் ஆண்டு 95 டன், 2019-ம் ஆண்டு 103 டன், 2020-ம் ஆண்டு 138 டன், 2021-ம் ஆண்டு 211 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. இதன்படி பார்த்தால் கடந்த 5 ஆண்டுகளில் பட்டாசு கழிவுகளின் அளவு 3 மடங்கு உயர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x