Published : 25 Aug 2022 03:09 PM
Last Updated : 25 Aug 2022 03:09 PM

வட தமிழகத்தில் அதிகரிக்கும் மழைப் பொழிவு; தென் மேற்கு பருவமழையும் மிக அதிகம்

சென்னை: வட தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் மழைப் பொழிவு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. அதேபோல், தென் மேற்கு பருவமழையால் இந்த ஆண்டு தமிழகத்தில் மிக அதிகமாக மழை பெய்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் இந்தியப் பருவமழைப் பொழிவில் அதிக மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை உறுதிசெய்யும் வகையில் இந்தியாவில் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசிக் கொண்டு இருக்கும்போதே கனமழை பெய்கிறது. இரண்டு நாட்கள் தொடர்ந்து வெப்ப அலை வீசுகிறது. இதற்கு அடுத்த ஒரு சில நாட்களில் நல்ல மழை பெய்கிறது. குறிப்பாக மழை விட்டு விட்டு பெய்கிறது.

இந்தியாவில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் தென் மேற்கு பருவமழைக் காலமாக இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் பருவமழையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதன்படி உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட 5 மாநிலங்களில் 1989 முதல் 2018 வரையிலான இந்த 30 ஆண்டு காலத்தில் தென் மேற்கு பருவமழையின் அளவு மிகவும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆண்டு மழைப் பொழிவு கடந்த 30 ஆண்டுகளில் குறைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் மழைப் பொழிவில் எந்த பெரிய மாற்றமும் நடைபெறவில்லை.

இதைப்போன்று இந்தியாவின் பல மாவட்டங்களில் 1989 முதல் 2018 வரையிலான இந்த 30 ஆண்டு காலத்தில் மழைப் பொழிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தென் ராஜஸ்தான், வடக்கு தமிழ்நாடு, வடக்கு ஆந்திரா, தென் மேற்கு ஓடிசா, தென் மேற்கு மத்திய பிரதேசம், மேற்கு வங்களம், மத்திய பிரதேசம், கோவா, உத்தராகண்ட், சத்தீஸ்கரின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

தென் மேற்கு பருவமழையும் தமிழகமும்: தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் ஜூலை மாதம் மிக அதிகமாக மழைப் பொழிந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு அதிக மழைப்பொழிவு தென் மேற்கு பருவமழை மூலம் கிடைக்கும். இந்த தென் மேற்கு பருவமழையானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடையும். இந்த நிலையில், இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் ஜூலை மாதம் மிக அதிக மழைப் பொழிவு பெய்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி ஜூலை 27-ம் தேதி வரையிலான மழைப் பொழிவு அளவின் படி இந்தியாவில் 451.5 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான அளவு மழைப் பொழிவு ஆகும்.

ஆனால், இந்தக் காலத்தில் தமிழகத்தில் மிக அதிக மழைப் பொழிவு பதிவாகி உள்ளது. இந்திய வானிலை மைய தரவுகளின்படி இந்த காலத்தில் இயல்பாக 110.8 மி.மீ மழை பெய்யும். ஆனால், இந்தாண்டு 196.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான அளவைக் காட்டிலும் 77 சதவீதம் அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும், தென் மேற்கு பருவமழைக் காலத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை தமிழகத்தில் 266.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும், இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 104 விழுக்காடு கூடுதல் என்று தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வெப்ப அலை நிலவரம் என்ன?

நாடு முழுவதும் கடந்த கோடை காலத்தில் வெப்ப அலைய வீசியது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக, இந்தியாவில் மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் வெப்ப அலை பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பத்தின் அளவு புதிய உச்சத்தை அடைந்தது. மார்ச் மாதம் 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் பதிவானது. இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் தொடர்ந்து வெப்ப அலை வீசியது.

இதனைத் தொடர்ந்து வெப்ப அலையை எதிர் கொள்ளவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில், வெயிலின் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.

மேலும், ‘மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தினமும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்பநிலை தொடர்பான தகவல்களை பதிவு செய்கிறது. அதற்கு ஏற்ப மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெயில் பாதிப்புகளால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு போதிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்’ என்றும் சுகாதாரத் துறை செயலாளர் தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் இது வரை வெப்ப அலை காரணமாக 17-ம் தேதி ஜூலை மாதம் வரை 24 பேர் மரணம் அடைந்துள்ள தெரியவந்துள்ளது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒருவர், ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 பேர், ஓடிசாவில் 9 பேர் என்று மொத்தம் 24 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டுகளை பொறுத்த வரையில் 2017-ம் ஆண்டு 375 பேர், 2018-ம் ஆண்டு 33 பேர், 2019-ம் ஆண்டு 505 பேர், 2020-ம் ஆண்டு 25 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x