

புதுடெல்லி: வரும் ஜூன் 30 தேதிக்குள் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாடு முழுவதுமுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாட்டை உருவாக்குவதையும், “தூய்மை மற்றும் பசுமை“ என்ற மேலான உத்தரவுக்கிணங்க, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்குவதையும் ஒரு இயக்கமாக மேற்கொள்ள உள்ளன. பிரதமர் மோடி, மே 29ம் தேதி அன்று, நாட்டு மக்களுக்கு ஆற்றிய மனதின் குரல் உரையில் கூறியதற்கிணங்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் 30 ஜுன் 2022-க்குள் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பதென்ற இந்தியாவின் உறுதிப்பாடு ஆகிய இரட்டைக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான விரிவான ஆலோசனை ஒன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும், அனுப்பி வைத்துள்ளது.
அதில், தூய்மை மற்றும் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளுதல், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க சிறப்பு முயற்சிகளை எடுப்பதோடு, பெருமளவில் மரக்கன்று நடுவதை, அனைத்து குடிமக்கள் - மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர், பெருந்தொழில் நிறுவனங்களின் பங்கேற்புடன் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தூய்மை இந்தியா இயக்கம் 2.0-ன் படி, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும், குப்பை சேகரிக்கப்படும் இடத்திலேயே 100% அளவிற்கு அவற்றை தரம் பிரிப்பதுடன், பிளாஸ்டிக் உள்ளிட்ட உலர் கழிவுகளை பிரிப்பதற்கான வசதிகளையும் மேற்கொள்வது அவசியம். அத்துடன், தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம், குப்பைக்கிடங்குகள் அல்லது நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவையும் குறைக்க வேண்டும்.
2,591 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. எஞ்சிய 2,100-க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளும், 30 ஜுன் 2022-க்குள் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கேற்ப மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உரிய ஆதரவை வழங்குவதுடன், சிறப்பு நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது, திடீர் சோதனை நடத்துதல் மற்றும் தடை உத்தரவை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாகவோ, அல்லது சாலை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தும் வகையிலோ, அனைத்து மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தங்களுக்கு அருகிலுள்ள சிமென்ட் ஆலைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி மேயர்கள், வார்டு கவுன்சிலர்கள், தன்னார்வ நிறுவனங்கள், உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் சங்கங்கள், சந்தை அமைப்புகள், சுய உதவிக் குழுவினர், மாணவர்கள், இளைஞர் குழுக்களின் பங்கேற்புடன் கூடியதாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இப்பணிகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆவணப்படுத்துவதுடன், உயர்மட்ட அளவில் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.