

உலகம் முழுவதும் மாசு மிகப் பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக நவீன மாசுக்கள் என்று அழைக்கப்படும் காற்று மாசு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. உலகத்தில் உள்ள 99 சதவீத மக்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி உலகில் ஏற்படும் 8 மரணங்களில் ஒரு மரணத்திற்கு மாசு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக அளவில் பதிவாகும் 6-இல் ஒரு மரணத்திற்கு மாசு காரணமாக உள்ளதாக புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் படி உலகில் மொத்தம் 90 லட்சம் மரணங்களுக்கு மாசு காரணமாக உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அதில் அதிக அளவு மரணங்கள் இந்தியாவில்தான் பதிவாகி உள்ளதாகவும் இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பது என்ன?
2019-ஆம் ஆண்டில் பல்வேறு வகையான மாசு காரணமாக 9 மில்லியன் மரணங்கள் பதிவாகி உள்ளது. காற்று மாசு காரணமாக மட்டும் 6.9 மில்லியன் மரணங்கள் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக நீர் மாசு காரணமாக 1.36 மில்லியன் பேர் மரணம் அடைந்துள்ளனர். குறிப்பாக நவீன மாசு என்று அழைக்கப்படும் காற்று, கெமிக்கல், மற்றும் பல்வேறு தொழில் நிறுவன மாசு காரணமாக 5.84 மில்லியன் மக்கள் மரணம் அடைந்துள்ளனர்.
பெண்களை விட ஆண்கள்தான் மாசு காரணமாக அதிகம் மரணம் அடைகின்றனர். 9 மில்லியன் மரணங்களில் 5.09 மில்லியன் பேர் ஆண்கள். 3.92 மில்லியன் பேர் பெண்கள். ஆசியாவில் தான் காற்று மாசு தொடர்பான மரணங்கள் அதிகம் பதிவாகி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் 16.7 லட்சம் பேர் மாசு காரணமாக மரணம் அடைந்துள்ளனர். இதில் 9.8 லட்சம் பேர் காற்று மாசு காரணமாக மரணம் அடைந்துள்ளனர். வீட்டில் ஏற்படும் காற்று மாசு காரணமாக 6.1 லட்சம் மரணங்கள் பதிவாகி உள்ளது.
இந்த அறிக்கை ஆசிய நாடுகளுக்கு பெரிய எச்சரிக்கையை அளித்துள்ளது. ஆசியாவில்தான் காற்று மாசினால் அதிக அளவு மரணங்கள் பதிவாகி உள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெரிய சவால்களை சந்தித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நாடுகள் மாசுக்களை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் அதிக அளவு முதலீடு செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?
> கடந்த 2 தசாப்தங்களாக மாசு காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 66 சதவீதம் அதிகரித்துள்ளது.
> கட்டுப்பாடு அற்ற நகர்புற வளர்ச்சி, தொழில் மயம், மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக இந்த மரணங்கள் அதிகரித்துள்ளது.
> நீர், காற்று உள்ளிட்ட பல மாசுகள் காரணமாக ஆண்டுக்கு 9 மில்லியன் மரணங்கள் பதிவாகிறது.
> 2015-ஆம் ஆண்டில் இருந்து மாசு காரணமாக பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை குறையவே இல்லை.
> காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 6.5 மில்லியன் மக்கள் மரணம் அடைகின்றனர்.
> கெமிக்கல் காரணமாக 1.8 மில்லியன் மரணங்கள் பதிவாகிறது.
> இனியும் தொடர்ந்து மாசுக்களை புறக்கணிக்க முடியாது.
அறிக்கையை படிக்க