7 ஆண்டாக யானைகளால் பாதிப்பு: நடவடிக்கை கோரி கிருஷ்ணகிரி கிராம மக்கள் தர்ணா

7 ஆண்டாக யானைகளால் பாதிப்பு: நடவடிக்கை கோரி கிருஷ்ணகிரி கிராம மக்கள் தர்ணா
Updated on
2 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சுற்றித் திரியும் யானைகளால், விவசாயம் பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், யானைகள் நடமாட்டத்தை தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறி, கிராம மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரியில் சுமார் 2 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மேகலசின்னம்பள்ளி, வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரத்தில் கடந்த 7 ஆண்டுகளாக யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் மற்றும் சோலார் மின்வேலி அமைக்க வேண்டுமெனக் கூறி சின்னமட்டாரப்பள்ளி, வரட்டனப்பள்ளி, பெலவர்த்தி, நாரலப்பள்ளி, பெரியகோட்டப்பள்ளி, கல்லகுறிக்கி, வேப்பனப்பள்ளி ஊராட்சிகளுக்கு உட்பட்ட 150-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

அவர்களை, ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பே தடுப்புக்கள் அமைத்து போலீஸார் தடுத்து நிறுத்தி, 50 பேர் மட்டுமே உள்ள செல்ல அனுமதிக்க முடியும் என்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் எனவும், ஆட்சியரிடம் நேரடியாக தங்களது குறைகளை தெரிவிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அவர்களிடம் ஏடிஎஸ்பி சங்கர், டிஎஸ்பி முரளி, இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், செந்தில்குமார், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சின்னசாமி, வனச்சரகர் முனியப்பன் மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 1.30 மணி வரை நீடித்தது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து 50 பேர் மட்டும் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க சென்றனர்.

மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் மனு அளித்த விவசாயிகள் கூறியது: “கடந்த 7 ஆண்டுகளாக யானை தொந்தரவு உள்ளது. அதற்கு முன், ஒரு யானை தான் இருந்தது. தற்போது எங்கள் வனப்பகுதியில், 12 யானைகள் வந்துள்ளன. கரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோது, யானைகள் ஆந்திர வனப்பகுதி வழியாக மகாராஜகடை சுற்று வட்டார பகுதி வனப்பகுதிகளுக்கு நுழைந்துள்ளன. அவை, விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்கிறது. நாங்கள் விவசாயம் செய்ய முடியவில்லை.

மனித உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. யானைகளோடு வாழ பழகி கொள்ளுங்கள் என்கின்றனர். யானைகள் இருக்கும் இடம் குறித்து வனத் துறையினருக்கு தகவல் அளித்தால், 10 பேரை அனுப்பி உள்ளோம் என்கின்றனர். ஆனால் ஒருவர் கூட வருவதில்லை. மேலும், படுகாயமடைந்தால், ரூ.50 ஆயிரம் தருகின்றனர். ஆனால், பல லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்கு செலவாகிறது. விவசாயிகள் பிச்சைதான் எடுக்கவேண்டும். யானைகளை விரட்டினால் மட்டும் போதாது. மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுப்பதுடன் சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்” என்றனர்.

தொடர்ந்து ஆட்சியர் தினேஷ்குமார் பேசுகையில், “யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நானே உங்கள் பகுதியை பார்வையிடுகிறேன். வருகிற வியாழன், வெள்ளிக்கிழமைகளில் உங்கள் பகுதிக்கு வருகிறேன். ஆனால் நீங்கள் கூட்டமாக வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. முக்கியமான, 5 முதல், 10 பேர் வரை வந்தால் ஒன்றாக காரில் சென்று யானை வரும் வழிகள் குறித்து ஆய்வு செய்யலாம். நான் வரும் வரை பணிகள் நடக்காமல் இருக்காது.

இன்று முதல் வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுவர். தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதியையொட்டி போடப்பட்டுள்ள இரும்பு கம்பிவேலி போல உங்களுக்கும் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in