

ராமேசுவரம்: அரபிக் கடலில் மூழ்கிய லைபீரியா நாட்டு சரக்கு கப்பலில் இருந்து, தனுஷ்கோடி கரையில் ஒதுங்கிய பிளாஸ்டிக் மூட்டைகளை தொட வேண்டாம் என பொது மக்களுக்கு வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து லைபீரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டது. இந்த கப்பலில் 100 கன்டெய்னர்கள் இருந்தன. இதில் 13 கன்டெய்னர்களில் அபாயகரமான ரசாயனங்களும், 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தன. மேலும் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயிலும் சரக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டன.
இந்த சரக்கு கப்பல் கடந்த மே 24 அன்று கொச்சியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, கப்பல் ஒரு பக்கமாக சாயத் தொடங்கியது. கப்பல் மூழ்குவதற்கு முன், இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கப்பலில் பணியாற்றிய 24 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
கப்பல் மூழ்கிய கடந்த 2 வாரங்களில் கடல் நீரோட்டத்தில் கப்பலிலிருந்த சில பொருட்கள் கேரள மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து ஒதுங்கிய வண்ணம் இருந்தது. இந்நிலையில், இன்று காலை தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகள் மற்றும் மூட்டைகளிலிருந்து வெள்ளை நிற பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் கரையில் ஒதுங்கி சிதறிக் கிடந்தன.
தகவல் அறிந்த ராமேசுவரம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், மெரைன் போலீஸார், மீன்வளத்துறை மற்றும் சுங்கத்துறையினர் கரை ஒதுங்கிய மூட்டைகளை பார்வையிட்டனர். மேலும், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மூட்டைகள் அருகில் செல்ல வேண்டாம் என ராமேசுவரம் வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மூட்டைகளை அகற்றும் பணிகளில் ராமேசுவரம் நகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.