மீன்கள் வாழத் தகுதியற்றது கிருஷ்ணகிரி அணையின் நீர் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கிருஷ்ணகிரி அணைக்கு வந்த ரசாயனக் கழிவு கலந்த நீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததால் செத்து மிதந்த மீன்கள்
கிருஷ்ணகிரி அணைக்கு வந்த ரசாயனக் கழிவு கலந்த நீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததால் செத்து மிதந்த மீன்கள்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் உள்ள நீரில், நைட்ரைட், நைட்ரேட் - அம்மோனியா ஆகியவை அதிகம் இருப்பதால், நீரில் ஆக்சிஜன் குறைகிறது. இதன் காரணமாக மீன்கள் உயிரிழப்பதுடன், மீன்கள் வாழ முடியாத நீராக மாறிவிட்டது என ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி என 2 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், கிருஷ்ணகிரி அணையின் மூலம் 52 அடி உயரத்துக்கு நீர் தேக்கப்பட்டு, விளை நிலங்களின் இரு போக பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது. இதேபோல், அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன்வளத்துறை சார்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு, குத்தகை முறையில் மீன் பிடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியை சேர்ந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் குத்தகை எடுத்து, மீன்களை பிடித்து விற்பனை செய்கின்றனர்.

வடகிழக்கு பருவமழை மற்றும் கோடை மழை சரிவர பெய்யாததால், அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றிருந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து 38 அடிக்கு கீழாக சென்றது. சில வாரங்களுக்கு முன்னர், தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் காரணமாக, கடந்த 5 நாட்களாக அணைக்கு விநாடிக்கு 400 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது.

ரசாயனக் கழிவுநீர்: அணைக்கு தற்போது வந்துள்ள நீரில், அதிகளவில் ரசாயனக் கழிவு இருந்ததால், அணையில் வளர்க்கப்பட்ட மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதப்பதால், அணை வளாகத்தில் கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து மீனவர்கள், பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மீன்வளத்துறை அலுவலர்கள் அணையில் உள்ள நீரில் மாதிரி எடுத்து, ஆய்வு செய்தனர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆய்வறிக்கையில், அணையில் உள்ள நீரில், வழக்கத்தை விட நைட்ரைட், நைட்ரேட்-அம்மோனியா போன்றவை அதிகரித்துள்ளது. இதனால் நீரின் காரத்தன்மை 600 மில்லி கிராம் உள்ளது. ஆனால் 40 முதல் 400 பிபிஎம் வரை மட்டுமே காரத்தன்மை இருக்க வேண்டும். எனவே, நீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துள்ளது. இதனால் மீன்களுக்கு இயல்பான வளர்ச்சி இருக்காது. மேலும், நீரில் மீன் உயிர் வாழ முடியாத அளவுக்கு, மிகவும் ஆபத்தான பாதிப்புகள் காணப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘அணையில் மீன்கள் அதிகளவில் செத்து மிதக்கும் நிலையில் நாள்தோறும் இந்த நீரில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குளித்து செல்கின்றனர். அவர்களுக்கு இந்த நீரை பயன்படுத்துதல் எந்தவிதமான உடல் உபாதைகள் ஏற்படும் என்பதையும் கண்டறிய வேண்டும்’, என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in