Last Updated : 28 Feb, 2024 09:00 AM

 

Published : 28 Feb 2024 09:00 AM
Last Updated : 28 Feb 2024 09:00 AM

காற்றால் வாரி இறைக்கப்படும் மணல்: கன்னியாகுமரி வரும் மக்கள் வருத்தம்

கன்னியாகுமரி படகு தளத்தில் கரையேற்றப்பட்ட மணல் அருகே கடற்கரை ஓரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்: கன்னியாகுமரி படகு தளத்தில் குவியும் மணலை அள்ளி படகு தளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலேயே மீண்டும் குவிப்பதால், காற்று வீசும் போது சுற்றுலா பயணிகளின் கண்களில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் படகுமூலம் பயணம் சென்று வருவதுகன்னியாகுமரியின் முதன்மையான பொழுது போக்கு அம்சமாக உள்ளது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லத்தில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். இதற்காக விவேகானந்தா, பொதிகை, குகன் ஆகிய 3 படகுகள் இயக்கப் படுகின்றன. இது தவிர வட்டக்கோட்டைக்கு திருவள்ளுவர், தாமிரபரணி என, இரண்டு சொகுசு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

படகு தளத்தை விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஏற்கெனவே உள்ள படகு தளத்தில் மணல் திட்டுகள் குவிந்து படகுகள் தரைதட்டி வருகின்றன. இதனால் அவ்வப்போது பொக்லைன் மூலம் மணல் அகற்றப்படுகிறது. கரையேற்றப்படும் மணலை வேறு இடத்துக்கு கொண்டு சேர்ப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவற்றை வெகுதூரம் கொண்டு சென்று கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அகற்றிய மணலை அப்பகுதியில் சற்று தூரத்தில் மீண்டும் கடலுக்குள் கொட்டுகின்றனர். படகு தளத்தின் அருகிலும் குவித்துவைக்கின்றனர்.

பலத்த காற்று வீசும்போது சுற்றுலா பயணிகள் மேல் மணல் அதிகளவில் வந்து விழுகிறது. படகு தளத்தின் அருகில் பகவதியம்மன் கோயில் கிழக்கு ஓரத்தில் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் கண்களில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. பகவதிம்மன் கோயில், பூம் புகார் கப்பல் போக்குவரத்து கழகம் செல்லும் பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள் மற்றும் பிற கட்டுமானங்களுக்குள் காற்றின் காரணமாக மணல் வாரியிறைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் தனி இடத்தை ஒதுக்கி, அங்கு மணலை கொட்டிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x