Published : 03 Feb 2024 08:25 PM
Last Updated : 03 Feb 2024 08:25 PM

“இனி பேரிடர்களுக்கு இடையேதான் இயல்பு வாழ்க்கை” - எச்சரிக்கும் ‘பூவுலகு’ சுந்தர்ராஜன்

திருப்பூர்: திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘இயற்கை நாம் கற்றது என்ன?’ எனும் தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் கோ.சுந்தர்ராஜன் பேசியது: “மனித குலம் இன்றைக்கு முச்சந்தியில் நிற்கிறது. காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் கரோனா போன்ற விலங்கியல் தொற்றுநோய் ஆகும். இந்த 3-ம் ஒன்றுசேர நிகழ்ந்தது, இந்த காலகட்டம் தான். மனித குல வரலாற்றில் கடந்த 150 ஆண்டு கால மனிதன் செய்த தவறை திருத்திக்கொள்வதற்கான, மாற்றிக்கொள்ளத்தான் நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்து, பல உயிர்கள் அழிந்து பல உயிர்கள் பிறந்துள்ளன. கடைசியாக தோன்றிய உயிரினம் மனிதன். பறவைகள் இல்லாத உலகத்தில் மனிதன் வாழவே முடியாது. மனிதன் இல்லாத உலகத்தில் பறவைகள் வாழலாம். ஏனென்றால் தேனீக்கள் இல்லையென்றால் 4 ஆண்டுகளுக்கு மேல் பூமி இருக்காது. தேனீக்கள் 70 சதவீத மகரந்த சேர்க்கை நடத்துவதால், மனிதனுக்கு உணவு கிடைக்கிறது. பல்லுயிரினம் தழைகக் வெப்பம் வேண்டும். காலநிலை மாற்றத்தால் இன்றைக்கு ஒரே நாளில் மழை கொட்டித்தீர்க்கிறது.

இந்தியா கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு சென்றபோது, கேப்டவுன் மாநகர் மேயர், இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் 2 நிமிடங்களுக்கு மேல் குளிக்க வேண்டாம் என்றார். அதற்கு காரணம் அங்கு நிலவிய தண்ணீர் பஞ்சம் தான். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பென்குயின்கள் குட்டிகளை ஈன்றும். தாய் பென்குயின்கள் நீந்தவோ, தவழவோ கற்றுக்கொள்ளும் வரை அங்கு தான் இருக்கும். ஆனால் பனி உருகியதால் 25 ஆயிரம் பென்குயின்கள் அழிந்துபோயின. இதே நிலை நீடித்தால் 2050-க்கு பிறகு உலகில் பென்குயின் இருக்காது. கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்தது. மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சென்னை வெள்ளத்தின் போது ராணுவ வீரர் தனது மனைவியுடன் உயிரிழந்தார். எதிரிகளால் வீழ்த்தப்படாத உயிர், சென்னை வெள்ளத்தில் பறிபோனது. பெருங்கடலும், காடுகளும் இல்லையென்றால், இந்த பூமி என்றைக்கோ மனிதர்கள் வாழ்வதற்கு என்றைக்கு தகுதி அற்றதாகவோ மாறிவிடும். காலநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணம் மனித குல செயல்பாடுகள் தான். 100 விழுக்காடு ஒற்றைக்காரணியாக மனிதகுல வாழ்வியல் உள்ளதாக உலக சுற்றுச்சூழல் அமைப்பு இன்றைக்கு தெரிவித்துள்ளது. 1986-க்கு பிறகு உலகத்தில் பிறந்த எந்த குழந்தையும், உலகில் இயல்பான காலநிலை மாற்றத்தை பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் பேரிடர் நேரும்.

பேரிடர்கள் வரும், மீள்வோம். மீண்டும் பேரிடர் தொடரும். இனி பேரிடர்களுக்கு இடையே தான் இனி இயல்பான வாழ்க்கையாக இருக்கும். கார்பன் வெளியீட்டில் சமநிலையை அடைய வேண்டும். முறையாக நீடித்து, நிலைக்கும் வளர்ச்சி வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்ததா என்பதைதான் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். மின்சாரம், தொழிற்சாலை, பொதுப்போக்குவரத்து, உணவு உற்பத்தி முறை, குப்பை மேலாண்மை, நுகர்வுத்தன்மையில் மாற்றங்கள் கொண்டுவந்தால் மட்டுமே நாம் அடுத்த தலைமுறையை, இந்த புவியை பாதுகாப்பாக நாம் கொடுக்க முடியும்.

வரும் சில ஆண்டுகளில் சென்னையில் 272 நாட்கள் வெப்பமாக இருக்கும். நாம் வெளியிடும் வெப்பத்தை பெருங்கடல் வாங்கி, வாங்கி இன்றைக்கு கடலின் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் பருவக்காற்று இல்லை. தமிழ்நாட்டில் 11.6 சதவீதம் நிலப்பரப்பு பாலையாகி மாறிவருகிறது. நிலம் தன் இயல்பை இழக்கும்போது, பாலையாகிறது. நெல் உற்பத்தியை கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளோம். நெல், சோளம், பருத்தி என தமிழ்நாட்டில் தொடர்ந்து விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை காவு கொடுத்து வாங்குகிற வளர்ச்சி, உண்மையான பொருளாதார வளர்ச்சியாக இருக்காது.

உலகத்தின் மிகப்பெரிய பொருளாதார பேரிடர் என்பது அமெரிக்காவில் கேத்தரீனா புயல் உருவாக்கியது தான். இன்றைக்கு வரை கணக்கிட முடியவில்லை. சென்னையில் அம்பத்தூர் தொழிற்சாலை தொடங்கி, திருநெல்வேலி வெள்ளத்தில் வீட்டின் உடைமைகள் என அனைத்தும் இன்றைக்கு பொருளாதார ரீதியாக இழந்து நிற்கிறோம். புயல், வெள்ளம், வறட்சி இவை அனைத்தும் தமிழ்நாடு மட்டுமில்லை, உலகம் முழுவதும் எதிர்கொண்டுதான் இருக்க வேண்டி இருக்கும். வெப்பத்தால் வரும் மாராடைப்பு நோய்கள், தண்ணீர் அசுத்தத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

காலரா, பெரியம்மை போன்ற தொற்றுநோய்கள் வேறு. கரோனா போன்ற தொற்றுநோய்கள் வேறு. 1984-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு விலங்கியல் தொற்று நோயால் உயிரிழந்தவர்கள் மூன்றேகால் கோடி பேர். கரோனா தொற்றை நாம் சேர்க்கவில்லை. விலங்குகள் வாழும் காட்டை அழித்து, நாம் நெருங்கும்போது எச்சில் அல்லது எச்சம் மூலமாகவோ விலங்கியல் தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது.

1 லட்சத்து 65 ஆயிரம் வைரஸ்கள் காட்டுயிர்களில் உள்ளன. காடுகளை நாம் ஆக்கிரமிக்கும்போது, நாம் விலங்கியல் தொற்றால் பாதிக்கப்படுவோம். மேற்கு தொடர்ச்சி மலைகள் தென்னிந்தியாவில் உயிர்கள் வாழ முடியாது. நொய்யல், பவானி, கிருஷ்ணா, காவிரியும் உற்பத்தி ஆகும் இடம் மேற்கு தொடர்ச்சி மலை தான். தமிழர்களை போல் இயற்கையை நேசித்த சமூகம் உலகில் இல்லை. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு, ‘மரம் சா மருந்தும் கொள்ளார்’ என்றது சங்க இலக்கியம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னது நம் சங்க இலக்கியம். இயற்கையை கொண்டாடியது நம் சமூகம். அரசோ, பெருநிறுவனங்களோ சுற்றுச்சூழலுக்கு எதிராக இருந்தால் நாம் குரல் கொடுக்க வேண்டும். போராடினால் அடுத்த தலைமுறை பாதுகாக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x