Published : 11 Jan 2024 02:05 PM
Last Updated : 11 Jan 2024 02:05 PM

நீலகிரியில் விலங்குகள் தாக்கி தொடரும் உயிரிழப்புகள்: மக்கள் - வனத்துறை இடையே வலுக்கும் மோதல்

பந்தலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் மு.அருணா, காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேலு. | கோப்பு படம்

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் - மனிதமோதல் அதிகரித்து வருவதால், மக்களுக்கும் வனத்துறைக்கும் மோதல் வலுத்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அண்மை காலமாக மனித - விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் 50-க்கும் மேற்பட்டோர் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர். 2014 ஜனவரி மாதம் சோலாடா கிராமத்தை சேர்ந்த கவிதா (33), அட்டபெட்டு பகுதியை சேர்ந்த சின்னப்பன் (54) ஆகியோரை ஆட்கொல்லி புலி கொன்றது.

2015-ம் ஆண்டு பந்தலூர் தாலுகாவுக்குட்பட்ட பாட்டவயல் பகுதியில் மகாலட்சுமி என்ற பெண்ணை தேயிலை தோட்டத்தில் புலி தாக்கி கொன்றது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட வுட்பிரையர் எஸ்டேட்டில் பணிபுரிந்த ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர் மது ஓரன் (50) என்பவரை ஆட்கொல்லி புலி கொன்றது.

இதையடுத்து, மேற்கண்ட சம்பவங்களில் மூன்று புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. அப்போது, ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வலியுறுத்தி, பாட்டவயல் பகுதி பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பிதர்காடு, நெலாக்கோட்டை வனச்சரக அலுவலகங்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. நெலாக்கோட்டை வனச்சரகர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வனத்துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

2022-ம் ஆண்டு வன விலங்குகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில், 2023-ம் ஆண்டு 13 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 10 பேர் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதில், 8 உயிரிழப்புகள், கூடலூர் வனக்கோட்டத்தில் நிகழ்ந்துள்ளன. யானைகள் தாக்கி படுகாயமடைந்தவர் களின் எண்ணிக்கை 11. மேலும், கரடிகள், காட்டு மாடுகளாலும் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்தாண்டு தொடக்கத்திலேயே பந்தலூரில் சரிதா என்ற இளம் பெண் மற்றும் நான்சி என்ற சிறுமி ஆகியோர் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மனித - விலங்கு மோதல் காரணமாக, வனத்துறையின் மெத்தனப் போக்கை கண்டித்து வனத்துறையினரை மக்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர். கூடலூர் வனக்கோட்டத்தில் பெரும்பாலான நாட்களில் வனத்துறையை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்துவது வாடிக்கையா கிவிட்டது. ஆனால் வருவாய் துறை அதிகாரிகள்தான் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பந்தலூரில் நடந்த போராட் டத் தின்போது, மாவட்ட ஆட்சியர் மு.அருணா, காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகரிக்கும் வேட்டை: வனத்துறையினரின் மெத்தனத் துக்கு சமீப காலமாக நடந்து வரும் வேட்டைகளே உதாரணம். அந்த வகையில், கூடலூரில் காலில் குண்டு காயத்துடன் யானை இறந்துகிடந்தது. அதைத்தொடர்ந்து, அதே பாணியில் சிறுத்தை ஒன்றும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறது. நாடுகாணி பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து துப்பாக்கி, குண்டுகள் மற்றும் மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

உதகை அருகே சோலூர் சோமர்டேல் எஸ்டேட் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட, நாட்டு துப்பாக்கியுடன் இரு வாகனங்களில் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதகை அருகே கேத்தி பகுதியில் தனியார் காட்டேஜில் தங்கியிருந்த தூத்துக்குடி, மதுரை பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சென்றுள்ளனர். அங்கு மலபார் அணில், குரைக்கும் மான் ஆகியவற்றை வேட்டையாடி, சமைத்து உண்பதற்கு காட்டேஜ்க்கு கொண்டு வந்தனர். கேத்தி பாலாடா பகுதியில் காட்டு மாடு துப்பாக்கியால் சுடப்பட்டது உட்பட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தொடர்புக்கு அப்பால் வனத்துறை: மாநில கட்டுப்பாட்டில் முதுமலை இருந்த வந்த நிலையில், புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டதும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதனால், மாநில அரசின் அதிகாரம் குறைந்து, பிடியும் வலுவிழந்தது. மேலும், உள்ளூர் அமைச்சரான கா.ராமச்சந்திரன் வனத்துறை அமைச்சராக இருந்து வந்த நிலையில், அவர் மாற்றப்பட்டு வனத்துறை அமைச்சராக மதிவேந்தன் நியமிக்கப்பட்டார்.

பொதுமக்களின் தொடர்புக்கு அப்பால் வனத்துறை சென்றுவிட்டதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதும் குறைந்து வருகிறது. இருவரை கொன்ற சிறுத்தையை பிடிக்க மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால், பெரும் சிரமத்துக்கிடையே மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தை இருவரை தாக்கிய சிறுத்தை தானா? என மக்கள் சந்தேகம் எழுப்பி போராட்டத்தை கைவிட மறுத்தனர். லேசான தடியடி நடத்தி மக்களை காவல்துறையினர் கலைத்தனர். மக்களின் போராட்டம் வலுத்ததால், பிடிபட்ட சிறுத்தையை மின்னல் வேகத்தில் சென்னை வண்டலூருக்கு அனுப்பினர்.

வனத்துறை மற்றும் மக்களிடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இனிவரும் காலங்களில் விலங்கு தாக்குதல்களால் உயிரிழப்புகள் தொடரும்பட்சத்தில், இந்த மோதலும் வலுக்கவே செய்யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x