Last Updated : 23 Dec, 2023 06:31 AM

 

Published : 23 Dec 2023 06:31 AM
Last Updated : 23 Dec 2023 06:31 AM

ஐக்கிய நாடுகள் சபையின் சூழல் திட்ட அமைப்பின் ஆசிய சுற்றுச்சூழல் விருது பெற்ற வன உயிரின காப்பாளர்

வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர்.

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியப் பூங்கா வன உயிரின காப்பாளருக்கு ஆசிய அளவிலான சுற்றுச்சூழல் விருதை ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட அமைப்பு வழங்கியது. ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட அமைப்பு (யுஎன்இபி) என்பது, ஐக்கிய நாடுகள் அவையின் சூழல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான அமைப்பாகும். இது வளர்ந்துவரும் நாடுகள் சூழல் தொடர்பில் பயனுள்ள கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு உதவுவதுடன், முறையான சூழல்சார் செயல்முறைகளை ஊக்குவித்து வருகிறது. இதன் தலைமை அலுவலகம் கென்யா நாட்டின் நைரோபி நகரில் உள்ளது. இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பல்வேறு பிரிவுகளில் சர்வதேச விருதுகளை வழங்கி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆசிய அளவிலான விருது, ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா தேசிய பூங்கா வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகருக்கு வழங்கப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு, குற்றத்தடுப்பு, கடற்கரை பகுதிகளில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அகற்றியது ஆகியவற்றுக்காக சுற்றுச் சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த விழாவில் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் இந்தியா வில் இவர் மட்டுமே (தமிழகத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி) இவ்விருதை பெற்றுள்ளார். விருது பெற்ற இவருக்கு வனத்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் கூறியதாவது, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை பிடித்து வெளிநாடுகளுக்கு கடத்த முற்பட்டவர்களை அதிக அளவில் கைது செய்தோம். கடல் பகுதியில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அகற்றியது போன்ற காரணங்களுக்காக எனக்கு விருது வழங்கப்பட்டது என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x