Last Updated : 03 Dec, 2023 01:05 PM

3  

Published : 03 Dec 2023 01:05 PM
Last Updated : 03 Dec 2023 01:05 PM

தமிழகத்தில் 45 கோடி மரங்கள் மாயம் - பனைக்கு மனிதனே வினை..!

கோவை: ‘தென்னையை வச்சவன் தின்னுட்டுச் சாவான், பனையை வச்சவன் பாத்துட்டு சாவான்’ என்பது முதுமொழி. ஏனெனில் பனை வளர்ந்து, பயன்தருவதற்கு அத்தனை ஆண்டுகள் ஆகும். தமிழகத்தின் மாநில மரம், பனை மரம் என்பது நம்மில் பலர் மறந்திருக்கலாம். நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால் என பனையின் வேர் முதல் இலை வரை அனைத்துமே பலன்தரக்கூடியவை என்பதால் பூலோகத்தின் கற்பகத்தரு என அழைக்கப்படுகிறது.

பனையின் வகைகள்: நாட்டுப்பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை. பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை என மொத்தம் 33 வகையான பனை மரங்கள் உள்ளன. இவற்றில், தமிழகத்துல் நாட்டுப்பனை, கூந்தப்பனை, தாளிபனை மட்டுமே உள்ளன. தமிழகத்துல் காகிதம் அறிமுகமாகும் வரை பனை ஓலையே எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

45 கோடி மரங்கள் மாயம்: சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் தமிழகத்தில் 50 கோடியாக இருந்த பனைமரங்கள், தற்போது 5 கோடியாக குறைந்துவிட்டன. பனையை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பனை மரங்களுக்கு மனிதனும், ஆட்சியாளர்களும் தான் வினையாக மாறினர் என குற்றம்சாட்டுகிறார் தமிழக கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: தற்போது இந்தியாவில் 8 கோடி பனைமரங்கள் தான் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் 5 கோடி பனை மரங்கள் தமிழகத்தில் உள்ளன. பழங்காலத்தில் ஓட்டுவீடுகளும், குடிசைகளும் அதிகமாக இருந்தன. அதில், மரச்சட்டங்கள் செய்வதற்கும், கூரை வேய்வதற்கும் என பனைமரங்கள் தேவைப்பட்டன.

தற்போது கான்கிரீட் கட்டிடங்களாக மாறிவிட்டதால், பனையின் பயன் தேவையின்றி போனது. தென்னை மரத்தைவிட, பனை மரத்தில்தான் நிறைய பலன்கள் உண்டு. ஆனால், தென்னை மரத்தைக் கொண்டாடுவதைப்போல, பனை மரத்தை நாம் கொண்டாடுவதில்லை. ஒரு பனை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 150 லிட்டர் பத நீர், ஒன்றரை கிலோ ஈர்க்கு, 16 நார் முடிச்சுகள், 24 கிலோ பனைவெல்லம் என பல பயன்கள் கிடைக்கின்றன. பனை உற்பத்திப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேண்டும்.

தடையை நீக்க வேண்டும்: கள்ளில் கலப்படம் உள்ளதாக கடந்த 1.1.1987-ம் ஆண்டு தமிழகத்தில் கள்ளுக்கு தடைவிதித்து அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். அதேவேளையில் கள்ளில் கலப்படம் செய்வதை தடுத்து, கேரளாவில் இன்றும் கள் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கள்ளில் கலப்படம் செய்யப்படுவதை தடுத்து, கள்ளுக்கான தடையை அரசு நீக்க வேண்டும்.

கற்பக விருட்சம், மாநில மரம் என்றெல்லாம் பெயரளவில் மட்டும் தான் சொல்லிக் கொள்கிறோம். பனையை காக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, பனை மரங்களை தமிழக அரசே அழித்து வருகிறது. இதே நிலை நீடித்தால், பனை மரங்களை பாடப்புத்தகத்திலும், அருங்காட்சியகத்தில் புகைப் படங்களாகவும் தான் பார்க்க முடியும். கரும்பைவிட 8 மடங்கு சர்க்கரையை கொடுக்கும் பனை மரத்தை தமிழக அரசு காக்க தவறிவிட்டது.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி, ஏற்றுமதி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், 70 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, பனை மரங்களை நட வேண்டுமென்ற ஆர்வமும் மக்களிடம் பெருகும். பனை பொருட்களை ஏற்றுமதி செய்தால், அந்நிய செலாவணி பெருகும்.

மக்களிடையே விழிப்புணர்வு: சீனி சர்க்கரையால் பல்வேறு உடல்உபாதைகள் ஏற்படுவதை அறிந்த பலர், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டை பயன்படுத்த தொடங்கி விட்டனர். பனை மரங்கள் முற்றிலும் அழியும் நிலையில் உள்ள இக்காலத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

சாலையோரங்களில் ஆங்காங்கே கருப்பட்டி காபி, பனங்கற்கண்டு காபி என விற்பனைக் கடைகளை பார்க்க முடிகிறது. இதுமட்டும் போதாது. நீர்நிலை கரையோரங்களில் பனை விதைகளை நடவு செய்து, அவற்றை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்களிடையே பனையை காப்பதற்கான அவசியம் தொடர்பாக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பனை மரம் நடும் விழாக்கள்: அரசியல் தலைவர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் மரம் நடும் விழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில், வேம்பு, மா, தென்னை என பல வகை மரங்களை நடவு செய்கின்றனர். மரம் நடும் விழா பட்டியலில் பனை விதைகளும் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் ஒரு பனை மரத்தையாவது நட வேண்டும். அப்போதுதான் பனையை காக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x