Last Updated : 13 Nov, 2023 11:56 AM

1  

Published : 13 Nov 2023 11:56 AM
Last Updated : 13 Nov 2023 11:56 AM

ஆம்பூர் பண்ணைக் குட்டைகளில் டன் கணக்கில் தோல் கழிவுகள் - ஆட்சியருக்கு தெரியுமா இப்படி நடப்பது?

பண்ணைக்குட்டையில் ரசாயனம் கலந்த கழிவுநீர் சேர்ந்துஅப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர்: ஆம்பூர் அருகே பண்ணைக் குட்டைகளில் தோல் கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், விதிமீறும் தோல் தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம் பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற் சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். தோல் தொழில் மூலம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகள் தொழில் வளத்தில் வளர்ச்சி பெற்று வந்தாலும், தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப் படும் கழிவுகள், ரசாயனம் கலந்த கழிவுநீர் அருகாமையில் உள்ள நீர்நிலை பகுதியிலும், காலி நிலங்களிலும் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆம்பூர் வட்டம் பெரியவரிகம் ஊராட்சியில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகளும் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் கழிவுநீரானது அங்குள்ள காலி மனைகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தோல் கழிவுகளும் விவசாய நிலங்களையொட்டியுள்ள இடங்களிலும், பாலாறு பகுதிகளில் இரவோடு, இரவாக கொட்டப் படுகின்றன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைக் குட்டைகள் மாவட்டம் முழுவதும் வெட்டப்பட்டன. இந்த பண்ணைக் குட்டைகளில் மழைநீர் சேருகிறதோ இல்லையோ, ஆம்பூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் ரசாயனம் கலந்த கழிவுநீர் சேர்ந்து கழிவுநீர் குட்டைப்போல் உள்ளது. கழிவுநீர் நிரப்பிய பண்ணைக் குட்டைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

அங்கு நிலத்தடி நீர் அதிகமாக மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட பண்ணைக் குட்டைகள் கழிவுநீர் கலந்த குட்டைகளாகவே மாறிவிட்டன. மாவட்ட நிர்வாகம் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக பண்ணைக் குட்டைகளை ஆய்வு செய்து, தோல் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘பெரியவரிகம் ஊராட்சியையொட்டி உள்ள ஏரியிலும், பெரியவரிகம் பகுதியில் இருந்து சோமலாபுரம் செல்லும் வழியில் உள்ள பாலாறு பகுதிகளிலும், பல்வேறு விளை நிலங்களிலும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வரப்படும் தோல் கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்படுகின்றன. இரவு நேரங்களில் தோல் கழிவுகளை டிராக்டர்களில் எடுத்து வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். இதை அதிகாரிகள் பார்வைக்கு கொண்டு சென்றாலும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

நச்சுத்தன்மை கொண்ட இது போன்ற கழிவுகளை நீர்நிலை பகுதிகளில் கொட்டுவதால், நிலத்தடி நீர் பாதிக்கின்றது. நிலத்தடி நீர் மனித பயன்பாட்டுக்கும், வேளாண்மை தொழிலை பாதிக்கும் வகையில் உள்ளது. ஆகவே, நீர்நிலை பகுதிகளில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரை விடுவதையும், தோல் கழிவுகளை கொட்டுவதையும் மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘உடனடியாக ஆய்வு நடத்தப்படும். பண்ணைக் குட்டைகளில் கழிவுநீர் வெளியேற்றப்படுவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை களுக்கு ‘சீல்' வைக்கப்படுவதுடன், கடும் அபராதமும் விதிக்கப்படும்’’ என்றனர். ஆம்பூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் ரசாயனம் கலந்த கழிவுநீர் சேர்ந்து கழிவுநீர் குட்டைப்போல் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x