

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தினசரி மூட்டை, மூட்டையாக தேங்கும் குப்பையை அகற்றுவதில் மருத்துவமனை நிர்வாகம், பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம் இடையே சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இதற்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வேலூர் அடுத்த பென்னாத்தூர் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட அடுக்கம்பாறை பகுதியில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 18 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இங்கு, தினசரி 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
வேலூர் மாவட்டத்துக்கான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக இருந்தாலும் அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆரணி, போளூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினசரி வந்து செல்பவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என கூறப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயாளிகள் மூலம் வரும் மருத்துவக் கழிவுகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அதேநேரம், மருத்துவமனையில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பையை அகற்றுவதில் பெரியளவில் நிர்வாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள பிணவறை அருகே மூட்டை, மூட்டையாக தேங்கும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினசரி ஆயிரக்கணக்கான மக்களை கையாளும் மருத்துவமனை நிர்வாகம் குப்பையை கையாள்வதில் மெத்தனமாக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேங்கும் குப்பையை அகற்றுவதில் மருத்துவமனை நிர்வாகமும், பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம் இடையே மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறும்போது, ‘‘மருத்துவமனையில் நோயாளிகளிடம் இருந்து கிடைக்கும் உயிரி மருத்துவக் கழிவுகள் அனைத்தும் சிகப்பு, மஞ்சள், நீலம் எனம் வகைப்படுத்தப்பட்டு 3 ‘ஷிப்டுகள்’ அடிப்படையில் தனியார் நிறுவனம் வசம் ஒப்படைத்து வருகிறோம்.
இதில், எந்த குளறுபடியும் ஏற்படுவதில்லை. ஆனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என அனைத்து தரப்பினர் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள், காலி மருந்து பெட்டிகள், வீணாகும் உணவுகள் குப்பையைாக தேங்கி விடுகிறது. இதில், மருத்துவப் பொருட்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக்கும் இடம் பெறுகிறது.
இவற்றை அகற்ற வேண்டியது பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம்தான். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பென்னாத்தூர் பேரூராட்சியில் இடம் பெற்றிருந்தாலும், அவர்கள் மருத்துவமனை குப்பையை அகற்றுவதில்லை. கேட்டால் மருத்துவமனைக்குள் சேரும் குப்பையை அகற்ற அனுமதியில்லை என்கின்றனர்.
மருத்துவமனையில் தேங்கும் குப்பையை அகற்றுவது தொடர்பாக சமீபத்தில் ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் பிறப்பித்த உத்தரவு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவுகளை பேரூராட்சி நிர்வாகம் புறக்கணிக்கிறது. தமிழ்நாட்டில் வேலூரை தவிர்த்து அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் மாநகராட்சி, நகராட்சியில்தான் உள்ளன.
அங்கெல்லாம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள்தான் குப்பையை அகற்றுகின்றனர். எங்களுக்கு மட்டும் சிக்கல் உள்ளது. நாங்களும் வேறு வழியில்லாமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசி குப்பையை தேக்கி வைத்து அனுப்பி வைக்கிறோம். இதுவும் எத்தனை நாளைக்கு என தெரியவில்லை. அவர்களும், அவ்வளவு தொலைவுக்கு லாரிகளை அனுப்புவதால் டீசலுக்கு செலவு ஆவதாக தெரிவிக்கின்றனர். பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம்தான் தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்’’ என்றனர்.
இதுகுறித்து பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாக தரப்பில் கூறும்போது, ‘‘கடந்த 2016-ம் ஆண்டு அரசாணையின் துணை விதிகளின்படி உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மருத்துவமனை வளாகத்துக்குள் சென்று குப்பையை சேகரிக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர். மேலும், 100 கிலோவுக்கு அதிகமான குப்பையை அவர்களே கையாள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குறிய வசதிகளும் மருத்துவமனை நிர்வாகத்திடம் உள்ளது. போதுமான பணியாளர்களும் இருக்கிறார்கள். மருத்துவமனை குப்பை வழியாக மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் இருப்பதால் குப்பையை எடுக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடமும் கூறிவிட்டோம்’’ என்றனர்.